PBKS vs LSG: பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ.. கலக்கிய அர்ஷ்தீப் சிங்!
PBKS Triumphs Over LSG: ஐபிஎல் 2025ன் 54வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களுடன் அசத்தினார். லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். படோனி அரைசதம் அடித்தாலும், லக்னோ அணி இலக்கை எட்ட முடியவில்லை. அர்ஷ்தீப் சிங் சிறப்பான பந்துவீச்சு காட்டினார்.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 54வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 4ம் தேதி தரம்சாலாவில் உள்ள ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியும் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் பிரப்சிம்ரன் சிங்கின் 48 பந்துகளில் 7 சிக்ஸர்களையும் 6 பவுண்டரிகளையும் வெளுத்து 91 ரன்கள் குவித்தார். அதேநேரத்தில், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 45 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 30 ரன்களும், ஷஷாங்க் சிங் 33 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 236 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் ஆகாஷ் சிங், திக்வேஷ் ரதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
237 ரன்கள் இலக்கு:
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்கரம் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே வேகமாக ரன்கள் எடுக்கத் தொடங்கினர். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் 12 ரன்கள் எடுத்தனர். 3வது ஓவர் வீசிய பஞ்சாப் கிங்ஸின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இரு தொடக்க வீரர்களையும் பெவிலியனுக்கு அனுப்பி அசத்தினார். உள்ளே வந்த பூரனும் அதிக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் எடுத்தார். இதையடுத்து, லக்னோ அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது.
பண்டும், படோனியும் இணைந்து லக்னோ அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தபோது, பண்ட் 18 ரன்களில் பரிதாபமாக அவுட்டானார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7.5 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது விக்கெட்டை இழந்தது. அஸ்மத்துல்லா உமர்சாய் வீசிய பந்தில் பண்ட் அவுட்டாக, உள்ளே வந்த டேவிட் மில்லரும் 8 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். படோனியுடன் கூட்டணி வைத்து அப்துல் சமத் அதிரடியாக பேட்டிங் செய்ய தொடங்கினார். கிடைத்த பந்துகளை எல்லாம் இருவரும் வெளுக்க லக்னோ அணி 16 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்துல் சமத் 24 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 45 ரன்கள் எடுத்து மார்கோ ஜான்சனிடம் அவுட்டானார், மறுமுனையில் சிறப்பாக விளையாடிய படோனி அரைசதம் கடந்தார்.
அடுத்ததாக உள்ளே வந்த ஆவேஷ் கான் தட்டி கொடுக்க, படோனி சிக்ஸரும், பவுண்டரியுமாக பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். கடைசி 6 பந்துகளில் 49 ரன்கள் தேவை என்ற நிலையில், சஹால் வீசிய முதல் பந்தில் படோனி 74 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் ஆவேஷ் கான் 1 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். இருப்பினும், லக்னோ அணியால் 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.