KKR vs RR: துரத்தலில் 95 ரன்கள்.. பராக்கின் அதிரடி வீண்… கொல்கத்தா 1 ரன்னில் த்ரில் வெற்றி!
Kolkata Knight Riders Thrill Win: ஐபிஎல் 2025ன் 53வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா 206 ரன்கள் குவித்தது. ரியான் பராக் 95 ரன்கள் எடுத்தாலும், ராஜஸ்தான் 205 ரன்களில் சுருண்டது. கடைசி ஓவரில் வெற்றி பெற்று, கொல்கத்தாவின் பிளே ஆஃப் நம்பிக்கையை அதிகரித்தது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 53வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 4ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி, ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும், இவரது இந்த ரன் ராஜஸ்தான் அணி வெற்றிபெற உதவி செய்யவில்லை. இதன் மூலம், கொல்கத்தா அணி தனது பிளேஆஃப் நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டது.
207 ரன்கள் இலக்கு:
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். வழக்கம்போல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் அறிமுகமான குணால் சிங் ரத்தோட் தனது முதல் போட்டியில் டக் அவுட்டாகி மோசமான நினைவை பெற்றார். இதனால், ராஜஸ்தான் அணி 8 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அதிரடியாக பேட்டிங்கை தொடங்கி, 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
துருவ் ஜூரெல் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக எதையும் சிறப்பாக செய்யவிடாமல் வருண் சக்கரவர்த்தி க்ளீன் போல்ட் செய்தார். இதனால் ராஜஸ்தான் அணி 71 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், ரியான் பராக் ஒரு முனையை கெட்டியாக பிடித்துகொண்டு, ஷிம்ரான் ஹெட்மியருடன் 92 ரன்கள் கூட்டணி அமைத்து ராஜஸ்தான் அணி வெற்றிக்கு மிக அருகில் வர உதவினார். ஹெட்மியர் 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரியான் பராக்கின் கடின உழைப்பு வீண்:
ரியான் பராக் 27 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த பிறகு, மொயின் அலி வீசிய ஒரே ஓவரில் 32 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, இந்த போட்டியில் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால், கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது, ரியான் பராக் ஆட்டமிழந்த பிறகு, 19வது ஓவர் வீசிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 11 ரன்கள் விட்டுகொடுக்க, கடைசி 6 பந்துகளில் ராஜஸ்தான நிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் ராஜஸ்தான் அணியால் ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால், கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று, பிளே ஆஃப் பாதையையும் தக்க வைத்து கொண்டது.