DC vs GT: டெல்லியை கதறவிட்ட குஜராத்.. முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற சுப்மன் படை!
Gujarat Titans vs Delhi Capitals: ஐபிஎல் 2025ன் 60வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. சுப்மன் கில் (93*) மற்றும் சாய் சுதர்ஷன் (108*) ஆகியோரின் அபார ஆட்டத்தால் குஜராத் அணி 200 ரன் இலக்கை எளிதாக எட்டியது. டெல்லி அணி கே.எல். ராகுலின் சதம் (112) உதவியுடன் 199 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 60வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 18ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியும், டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியும் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி கே.எல்.ராகுலின் சதத்தின் உதவியுடன் 199 ரன்கள் குவித்தது. 200 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐபிஎல் 2025 இன் பிளேஆஃப்களை எட்டிய முதல் அணியாக குஜராத் மாறியுள்ளது.
200 ரன்கள் இலக்கு:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் செயலிழந்து போனார்கள். குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் 61 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாட, அவருக்கு உறுதுணையாக கேப்டன் சுப்மன் கில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இருவரும் சேர்ந்து 15 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை அடித்தனர். டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தபோது, கே.எல். ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸில் ராகுல் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தப் போட்டியில் வெறும் 39 ஓவர்கள் வீசப்பட்டது. மொத்தம் 404 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால் 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன.
பிளே ஆஃப்க்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்:
Talk about 𝐃𝐎𝐌𝐈𝐍𝐀𝐓𝐈𝐎𝐍 👊
Playoffs ➡ #AavaDe 😉💪 pic.twitter.com/orYduOW56V
— Gujarat Titans (@gujarat_titans) May 18, 2025
ஐபிஎல் 2025 இன் பிளேஆஃப்களை எட்டிய முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் மாறியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போது 12 போட்டிகளில் 18 புள்ளிகளைக் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளதால், 22 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை எட்டியது. டெல்லி கேபிடல்ஸைப் பொறுத்தவரை, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தோல்வி பெற்றபோதிலும், பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறவில்லை. டெல்லி அணிக்கும் இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. இந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 17 புள்ளிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்.