India vs England Test: 5055 நாட்களுக்கு பிறகு! கோலி, ரோஹித், அஸ்வின் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி..!
Kohli, Rohit, Ashwin's Absence: 2011 ஆகஸ்ட் 18 அன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கோலி, சர்மா, அஸ்வின் இல்லாமல் இந்தியா விளையாடியது. 5055 நாட்களுக்குப் பிறகு, 2025 ஜூன் 20 அன்று, இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்த மூன்று முக்கிய வீரர்களும் இல்லாமல் இந்தியா களமிறங்குகிறது. இது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வு. மூவரும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்டில் அறிமுகமானது மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாடி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் வரலாற்றை பொறுத்தவரை விராட் கோலி (Virat Kohli) , ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) ஆகியோர் முக்கிய தூண்களாக இருந்தனர். குறைந்தது, இவர்களில் ஒருவர் கூட இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டி என்பது சாத்தியமற்றது. இந்தநிலையில், 5055 நாட்கள் என்பது எவ்வளவு நீண்ட தூரம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு நாட்களுக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் வித்தியாசமான ஒன்று நடக்கப் போகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அன்றும் இன்றும் இடையே உள்ள ஒரே பொதுவான விஷயம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் நடக்கப்போகிறது. அந்தவகையில், 5055 நாட்களுக்குப் பிறகு உலகம் மீண்டும் ஒருமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான ஒரு விஷயத்தை பார்க்க இருக்கிறது..? அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
5055 நாட்களுக்கு முன்பு, அதாவது 2011 ஆகஸ்ட் 18ம் தேதி:
5055 நாட்களுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தத் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் ஆகஸ்ட் 18, 2011 அன்று தொடங்கியது. அப்போதுதான் ரோஹித் சர்மா, விராட் கோலி அல்லது ரவிசந்திரஸ் அஸ்வின் மூவரும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இல்லாத கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இந்த 3 முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி அந்த டெஸ்டில் விளையாடியது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5055 நாட்களுக்குப் பிறகு, அதாவது 2025 ஜூன் 20ம் தேதி:
சரியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2025ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதே சம்பவம் நடக்கப்போகிறது. இந்த முறையும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இங்கு 2025 ஜூன் 20ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஹெடிங்லி ஸ்டேடியத்தில் களமிறங்குகிறது. 5055 நாட்களுக்கு பிறகு இந்த முறை ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் ப்ளேயிங் லெவனில் விளையாட மாட்டார்கள். இந்த மூன்று இந்திய கிரிக்கெட் வீரர்களும் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே அணிக்கு எதிராக அறிமுகமும் ஓய்வும்:
இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளது. அது என்னவென்றால், இந்த 3 வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்கள். அதேபோல், இந்த மூன்று வீரர்களும் ஓய்வு பெறுவதற்கு முன்பு பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாடினார்கள்.