IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக மீண்டும் மோதுமா?.. இதோ முழு விவரம்!!
T20 World Cup 2026: இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் அரையிறுதி வரை செல்வது எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே வெளியேறியது. எனவே, 2026-ல் அவர்கள் மீண்டும் பார்முக்கு வருவது இந்தியாவுடனான இரண்டாவது மோதலுக்கு அவசியமாகும்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுமா?
2026 டி20 உலகக்கோப்பையில் (2026 T20 World Cup) இந்திய அணி அபாரமான ஃபார்மில் உள்ளது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் எதிரணிகளைத் துவம்சம் செய்து வெற்றிநடை போட்டுள்ளது. பலமான எதிரணியாகக் கருதப்பட்ட பாகிஸ்தானையும் இந்தியா வீழ்த்தி அசத்தியுள்ளது. தற்போது சூப்பர் 8 (Super 8) சுற்று உறுதியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை இந்தியா-பாகிஸ்தான் (India vs Pakistan) மோதலை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அது சாத்தியமா? என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
இதையும் படிக்க : 5 கேட்சுகள் மிஸ்.. கைகொடுத்த துபே.. நெதர்லாந்து போட்டியில் இந்தியாவின் ஆட்டம் எப்படி?
சூப்பர் 8 சுற்றில் மோதல் சாத்தியமா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan) ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் (குரூப் ஏ) இருந்ததால், சூப்பர் 8 சுற்றில் இவை மீண்டும் மோத வாய்ப்பு இல்லை. ஏனெனில் சூப்பர் 8 சுற்றில் அணிகள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சூப்பர் 8 – உத்தேசப் பிரிவுகள்:
பிரிவு 1 (G1): ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா
பிரிவு 2 (G2): நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான்
மீண்டும் மோதுவதற்கான வழிகள்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத வேண்டுமென்றால், இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன:
1. அரையிறுதியில் மோதல் (Semi-Finals):
தொடரின் விதிகளின்படி, பிரிவு 1-ல் முதலிடம் பிடிக்கும் அணி, பிரிவு 2-ல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் மோதும். அதேபோல் பிரிவு 1-ல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி, பிரிவு 2-ல் முதலிடம் பிடிக்கும் அணியுடன் மோதும். அதனால், அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடக்க வேண்டுமென்றால், இந்தியா தனது பிரிவில் முதலிடம் பிடித்து, பாகிஸ்தான் தனது பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்க வேண்டும். அல்லது, இந்தியா தனது பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து, பாகிஸ்தான் தனது பிரிவில் முதலிடம் பிடிக்க வேண்டும்.
2. இறுதிப்போட்டியில் மோதல் (Finals):
ஒருவேளை இரண்டு அணிகளுமே தங்கள் பிரிவுகளில் முதலிடம் (அல்லது இரண்டு அணிகளுமே இரண்டாம் இடம்) பிடித்தால், அரையிறுதியில் வேறு அணிகளுடன் மோதும். அந்த அரையிறுதிப் போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி பெற்றால், இறுதிப்போட்டியில் மகுடத்திற்காகப் போராடும் சுவாரசியமான சூழல் அமையும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு:
இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே, வணிக ரீதியாகவும், சுவாரசியத்திற்காகவும் இவ்விரு அணிகளும் குறைந்தது இரண்டு முறையாவது மோதிக்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை அமைய வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.
இதையும் படிக்க : ஆணவத்துல ஆடக்கூடாது.. தொடர்ந்து சரியும் ஆஸ்திரேலியா.. போட்டோவை வைரல் செய்யும் ரசிகர்கள்!
போட்டி எங்கே நடக்கும்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது மோதல் (அரையிறுதி அல்லது இறுதிப்போட்டி எதுவாக இருந்தாலும்) அரங்கேறினால், அந்தப் போட்டி கொழும்புவில் (இலங்கை) நடைபெறும். இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான முன்கூட்டிய ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.