HBD Gautam Gambhir: உலகக் கோப்பை நாயகன் டூ பயிற்சியாளர்.. 44 வயதை தொடும் கவுதம் கம்பீர்..!

Gautam Gambhir 44th Birthday: கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கவுதம் கம்பீர் அறிவித்தார். இதை தொடர்ந்து, 2022ம் ஆண்டில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக பயிற்சியாளர் பதவியை தொடங்கினார்.

HBD Gautam Gambhir: உலகக் கோப்பை நாயகன் டூ பயிற்சியாளர்.. 44 வயதை தொடும் கவுதம் கம்பீர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

Published: 

14 Oct 2025 11:59 AM

 IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) இன்று அதாவது 2025 அக்டோபர் 14ம் தேதி தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (IND VS WI) அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் டெல்லியில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கடமையில் கம்பீர் இருந்து வருகிறார். இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு நாளை அதாவது 2025 அக்டோபர் 15ம் தேதி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுகிறார். டி20 உலகக் கோப்பை (2007) மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை (2011) போன்றவற்றை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கேப்டனாக, கம்பீர் ஐபிஎல் கோப்பையை 2 முறையும், ஒரு வழிகாட்டியாக, கேகேஆர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது பயிற்சியின் கீழ், இந்த 2025ம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது எப்போது..?

கடந்த 1981ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கவுதம் கம்பீர் டெல்லியில் பிறந்தார். கம்பீர் 10 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் பயின்றார். தனது ஆரம்ப நாட்களில், கம்பீர் சஞ்சய் பரத்வாஜின் பயிற்சியின் கீழ் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி கவுதம் கம்பீர் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். ஒரு வருடம் கழித்து, அவர் டெஸ்ட் அரங்கிலும், பின்னர் 2007ம் ஆண்டு தனது டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். கம்பீர் 3 வடிவங்களிலும் சேர்த்து 242 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ALSO READ: ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைக்க தயார்.. தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா!

இந்திய அணிக்காக கவுதம் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 சதங்கள், 22 அரைசதங்களுடன் 4154 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து, 147 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 11 சதங்கள் மற்றும் 34 அரை சதங்களுடன் 5238 ரன்களும்,
37 டி20 போட்டிகளில் 7 அரைசதங்களுடன் 932 ரன்களும் எடுத்துள்ளார்.

2 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டம்:


2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணிகளில் கவுதம் கம்பீர் இடம்பெற்றிருந்தார். இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார். 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கவுதம் கம்பீர் 97 ரன்கள் எடுத்தார்.

கெளதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில்  இரண்டு முறை ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். மேலும், கவுதம் கம்பீர் ஐபிஎல்லில் கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 154 போட்டிகளில் 4,217 ரன்கள் எடுத்தார்.

ALSO READ: வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்.. கேப்டனாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கில்!

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கவுதம் கம்பீர் அறிவித்தார். இதை தொடர்ந்து, 2022ம் ஆண்டில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாகவும், 2024ம் ஆண்டில், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் 2024ம் ஆண்டு ஐபில் கோப்பையை வென்ற கேகேஆர் அணிக்கு ஒரு வழிகாட்டியாகவும் செயல்பட்டார். பின்னர், 2024ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி பிசிசிஐ கம்பிரை இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது. அவரது தலைமையில், இந்திய அணி 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்தியா ஆசிய கோப்பையையும் வென்றது.