Vastu Tips: இந்த திசையில் மீன் தொட்டியை வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்!
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் மீன் தொட்டி வைப்பது செல்வம், மகிழ்ச்சி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த மீன் தொட்டியானது வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. மேலும் மீன்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருப்பது மங்களகரமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீன் தொட்டிக்கான வாஸ்து டிப்ஸ்
பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தில் பலருக்கும் அபரிமிதமான நம்பிக்கை இருக்கும். ஜோதிடத்தை போல வாஸ்து சாஸ்திரங்களும் தனிமனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. வாஸ்து என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அதன் தாக்கமானது அத்தகைய நிலத்தில் வைக்கப்படும் அசையும் மற்றும் அசையா பொருட்களை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் அல்லது ஒருவரின் மகிழ்ச்சி தொடங்கி துன்பம் வரை அனைத்திற்கும் வாஸ்துவும் ஒருவித காரணமாக அமைகிறது என உறுதியாக நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் மீன் தொட்டி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் காணலாம்.
மீன் தொட்டி தொடர்பான விதிகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு வீட்டில் மீன் தொட்டி சரியான திசையில் வைக்கப்பட்டு அதில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை சாஸ்திரப்படி சரியான எண்ணிக்கையில் இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சியும் நேர்மறை எண்ணமும் அதிகமாக நிறைந்திருக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தகைய வீடு செல்வ செழிப்புக்கும் காரணமாக அமையும் என நம்பப்படுகிறது. பொதுவாக மீன் வளர்ப்பது என்பது இந்திய குடும்பத்தில் அனைத்து மதத்தினரிடத்திலும் உள்ளது. இது வீட்டுக்கு அடிப்படையிலேயே ஒரு அழகை கொடுத்தாலும் நீங்கள் எப்படிப்பட்ட மீன்கள் வளர்க்கிறீர்கள் என்பது தான் விஷயமே உள்ளது.
மீன் தொட்டி வைப்பதில் பின்பற்ற வேண்டிய விதிகள்
சாஸ்திரங்களின்படி, மீன் தொட்டியில் பாயும் நீரின் சத்தமானது வீட்டில் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும் இது செழிப்புக்கும் வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. நீங்கள் வீட்டில் மீன் தொட்டி வளர்ப்பவராக இருந்தால் அது எதிர்மறை எண்ணங்களுடன் வீட்டிற்குள் வருபவர் அவர்களை உங்களிடம் இருந்து விலக்கி வைக்கும். தொட்டிக்குள் மீன்கள் அங்கும் இங்கும் செல்வதை பார்க்கும் போது நம்முடைய மன அழுத்தம் குறைந்து நிம்மதியான, மகிழ்ச்சியான நிலை உண்டாகிறது. மேலும் மீன் தொட்டியில் எந்த அளவுக்கு மீன்கள் இருக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் செல்வ வளம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த திசை மிகவும் சிறந்தது
வாஸ்து சாஸ்திரத்தை பொருத்தவரை வடகிழக்கு திசை நீர் தொடர்பான பொருட்களை வைப்பதற்கு சிறந்த இடமாகும். இது நேர்மறை ஆற்றல், செல்வம் ஆகியவற்றை ஈர்க்கும் இடமாக உள்ளது. அதன்படி கிழக்கு, வடகிழக்கு அல்லது வடக்கு திசையில் மீன் தொட்டியை வைப்பது மிகவும் மங்களகரமானதாகும். அதேபோல் வீட்டு வாசல் கதவின் இடது பக்கத்தில் மீன் தொட்டியை வைப்பது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிலேயே அன்பை அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகிறது.
சமையலறை அருகே மீன் தொட்டியை வைக்கக்கூடாது இதனால் வீட்டு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் மீன் தொட்டியில் உள்ள நீரை அடிக்கடி மாற்ற வேண்டும். இது வீட்டின் நேர்மறை ஆற்றலுடன் தொடர்பு கொண்டது. மேலும் மீன் தொட்டியில் அழுக்கடைந்த நீர் இருந்தால் நிதி தொடர்பான பிரச்சனைகள் வரும் என நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியும் தடைகளுடன் தான் நடக்கும் என சொல்லப்படுகிறது.
வீட்டின் திசை மீன் தொட்டிக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு அதில் துள்ளி விளையாடும் மீன்களின் எண்ணிக்கையும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் மீன்கள் இருப்பது மங்களகரமானதாக குறிப்பிடப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)