காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு போறீங்களா? – இதை செய்ய மறக்காதீங்க!
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், பக்தர்களின் செல்போன் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைக்க, புதிய தானியங்கி லாக்கர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, கோயிலுக்குள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், மற்ற பக்தர்களின் அமைதிக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என நம்பப்படுகிறது. இத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

காமாட்சி அம்மன் கோயில்
காஞ்சிபுரத்தில் (Kanchipuram) அருள்பாலித்து வரும் காமாட்சியம்மன் கோயிலில் (Kamakshi Amman Temple) பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் உடமைகளை வைக்க புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம். இந்தியா முழுவதும் வழிபாட்டு தலங்கள் ஏராளமாக உள்ளது. பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கும் வெவ்வேறு இடங்களில் இருந்து மற்ற மதத்தைச் சார்ந்த மக்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இப்படியான நிலையில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு, தூக்கம், உறவு மறந்து அதில் மூழ்கி போயிருக்கிறார்கள். இது வீட்டு நிகழ்ச்சிகள் தொடங்கி பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களிலும் பலருக்கும் தொந்தரவாக அமையத் தொடங்கியுள்ளது.
இதனால் பல கோயில்களில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்லும்போது அங்கிருக்கும் லாக்கரில் செல்போன் மற்றும் உடமைகளை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். இது ஒரு செல்போனுக்கு ரூ.5 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உடமைகளுக்கு அதற்கேற்றாற்போல நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காமாட்சியம்மன் கோயிலில் வசதி
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அருள் பாலித்து வரும் காமாட்சியம்மன் கோயிலில் இந்தியாவில் முதல் முறையாக தானியங்கி செல்போன் மற்றும் உடைமைகள் வைக்கும் லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன்கள் கோயிலுக்குள் கொண்டு செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் நகரமாக திகழும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இவர்களில் சிலர் கோயிலினுள் பூஜை வழிபாடு, சாமி கருவறை, கோயில் சுற்றுப் பிரகாரங்கள் ஆகியவற்றில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இது மன அமைதியை தேடி வரும் மற்ற பக்தர்களுக்கும் இடையூறாக அமைகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு காமாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாசலில் 300 செல்போன்கள் வைக்கும் தானியங்கி லாக்கர் மற்றும் உடைமைகளை வைக்கும் பெட்டகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் நேரடியாகவே இயக்கலாம் எனவும், உங்களுடைய செல்போன் எண்ணை பாஸ்வேர்டாக செலுத்தி லாக்கர் அதனை வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
அதன்படி பக்தர்கள் அங்கு நிறுவப்பட்டிருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். அதில் நீங்கள் எத்தனை செல்போன்களை வைக்கப் போகிறீர்கள் என்ற ஆப்ஷன் கேட்டிருக்கும். அதற்கான பதிலை கொடுத்தவுடன் அடுத்த சில நொடிகளில் அங்கிருக்கும் லாக்கரில் ஒன்று திறக்கும். அதில் உங்களுடைய செல்போன்களை வைத்து விட்டு லாக் செய்து கொள்ளலாம். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தில் உங்களுடைய லாக்கர் எண் மற்றும் செல்போன் எண்ணை கொடுத்தால் லாக்கர் மறுபடியும் திறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு செல்போனுக்கு ரூ.10 , உடைமைகளுக்கு ரூ.45 வரை வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.