Guru Peyarchi 2025: எல்லாம் நல்ல காலம் தான்.. ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
2025-ம் ஆண்டு மே மாதம் 11 அல்லது 14-ம் தேதி நிகழும் குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பொருளாதாரம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் எனப் பல துறைகளில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடந்த ஆண்டின் பிரச்னைகள் நீங்கி, தெளிவான சிந்தனையுடன் செயல்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை குரு பெயர்ச்சி (Guru Peyarchi) என்பது ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு ராசிகளில் நிகழும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியானது மே 11 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின்படியும், மே 14 ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின்படியும் நிகழவுள்ளது. இந்த முறை குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். இப்படியான நிலையில் குரு பெயர்ச்சியால் ரிஷப ராசியினர் (Taurus) அடையும் பலன்கள் பற்றி காணலாம். ரிஷப ராசியினரைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டாக மனதளவில், உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகளை சந்தித்திருக்கலாம். சிலருக்கு பணியிடத்தில் பிரச்னை, வேலை கூட போகும் சூழல் உண்டாகியிருக்கலாம். தற்போது குருபெயர்ச்சியின்போது குரு பகவான் இரண்டாம் இடத்துக்கு செல்கிறார் என்பதால் குடும்ப ஸ்தானத்தை அபிவிருத்தி செய்யும் என எடுத்துக் கொள்ளலாம்.
ரிஷப ராசி சேர்ந்த பெண்கள் இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக தங்கத்தில் முதலீடு செய்வார்கள். மின்னணு சாதனங்கள் நிறைய வாங்கும் சூழல் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களுடைய பேச்சை கேட்டு நடக்கும் காலம் கனியும். புதன் வீட்டில் குரு இருப்பதால் உங்களுடைய முடிவுக்காக பலரும் பார்த்திருப்பார்கள். இதுவரை பல்வேறு குழப்பங்களால் அவதிப்பட்ட நீங்கள் இந்த குரு பெயர்ச்சிக்கு பின்னால் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.
அனைத்தும் சாதகமாக அமையும்
உடல் உபாதைகள், ஆரோக்கிய பாதிப்புகள் அனைத்தும் சரியாகும். போட்டி என்று வந்தால் ஜெயிப்பதற்கு உரிய அத்தனை வழிகளையும் அறிந்திருப்பீர்கள். இந்த ராசியினர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பதவிக்கு செல்லும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு பலப்படும். சட்ட வழக்குகள் அனைத்தும் சாதகமான முடிவுக்கு வரும்.
எதிர்பாராத சொத்து இந்த ராசியினர் கைக்கு வரும். இழந்த பொருட்களுக்கு ஈடாக எதிர்பாராத பொருட்கள் கிடைக்க கூடிய சூழல் உருவாகும். பணியிடங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட நல்ல செய்திகள் வந்து சேரும். வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்ல வேண்டிய காலமாகவும் அமையும்.நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். தேவைப்படும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து ஒதுங்கி செயல்பட்டாலும் தவறில்லை. தொழிலில் அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் பணப்பழக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த கோயிலுக்கு செல்லலாம்
குருபெயர்ச்சியால் இந்த ராசியினர் தங்களுக்கு இருக்கும் கடனின் ஒரு பகுதியை அடைப்பார்கள். தேவைப்படும் இடத்தில் இருந்து பண உதவி இருக்கும். குரு இரண்டாம் வீட்டில் இருப்பதால் குருபெயர்ச்சிக்குப் பின் அன்னதானம் செய்வது மிகப்பெரிய பலனை கொடுக்கும். அதேபோல் ராஜ அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலிக்ககூடிய கோயிலுக்கு சென்றால் சிறப்பு கிட்டும். அப்படியில்லாவிட்டால் வாமன அவதாரத்தில் கிருஷ்ணர் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
இந்த குருபெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு பொருளாதார அடிப்படையில் 95% ஆகவும், மகிழ்ச்சி அடிப்படையில் 85% ஆகவும் சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் இதற்கு பொறுப்பேற்காது)