Aadi Amavasai: ஆடி அமாவாசை நாளில் இதெல்லாம் தானம் கொடுத்தால் புண்ணியம்!
2025 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 24அன்று வருகிறது. இது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் தானம் செய்வதால் பாவம், தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது. உணவு, தானியங்கள், உப்பு, பசு, ஆடை, நெய், எள் போன்றவற்றை தானம் செய்யலாம் என சொல்லப்படுகிறது,

ஆடி அமாவாசை தானம்
பொதுவாக மாதம்தோறும் அமாவாசை திதி (Amavasai) வந்தாலும் ஒரு வருடத்தில் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசைகள் மிகுந்த விசேஷமாகவும் புனிதமான நாளாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது பித்ருலோகத்தில் இருந்து நமது முன்னோர்கள் பூலோகத்திற்கு ஆடி மாதம் புறப்பட்டு புரட்டாசி மாதத்தில் தங்கி தை மாதத்தில் மீண்டும் பித்ருலோகம் செல்வதாக நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை வரும் ஜூலை 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை என்றால் அது முன்னோர்களுக்கான நாள் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியான இந்த ஆடி அமாவாசை தினத்தில் (Aadi Amavasai) நம் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பிறக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் ஆடி அமாவாசை தினம் குலதெய்வத்திற்கும் உகந்த நாளாகவே கருதப்படுகிறது. இவை இரண்டின் அருளாசி நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை நாம் இந்த நாளில் செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தானம் அளிப்பது. அப்படி என்ன தானம் இந்த நாளில் நாம் செய்யலாம் என்பது பற்றி காணலாம்.
என்னென்ன தானம் செய்யலாம்?
இந்த நாளில் ஒருவர் தானம் செய்தால் அவர்களுக்கான பாவம், தோஷம் மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கஷ்டம் அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது. இந்த நன்னாளில் அதிகாலையில் எழுந்து அருகில் இருக்கும் நீர் நிலைகளில் நீராடி பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பின்னர் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டில் அவர்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை சமைத்து ருசி பார்க்காமல் படையலிட்டு பின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காகத்திற்கு உணவு வைத்த பிறகுதான் யார் ஒருவர் பித்ரு தர்ப்பணம் கொடுத்திருக்கிறாரோ விரதம் முடிக்க வேண்டும். அவர்களுக்கு பின்னர் தான் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
Also Read:தானம் செய்யப் போறீங்களா?.. தயவுசெய்து இதெல்லாம் யோசித்து பண்ணுங்க!
மகாலட்சுமியின் அருளாசி கிடைக்குமாம்
இந்த நன்னாளில் ஏழை மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு ஏதேனும் உணவு வாங்கி கொடுத்தால் மறைந்த முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். அதேசமயம் தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை தானம் செய்தால் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணியின் பார்வை நம் மீது பட்டு செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் இந்த நாளில் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் உப்பை தானமாக கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் நாம் தற்போது வாழும் பிறவியிலோ அல்லது முற்பிறவியலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது. அடுத்ததாக தானங்களில் மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் பசு தானம் செய்தால் பித்ரு சாபங்கள் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக நம்முடைய ஏழு தலைமுறைநேர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என தீர்வாக நம்பப்படுகிறது.
சிலர் இந்நாளில் பயன்படுத்திய ஆடை அல்லது புதிய ஆடை ஆகியவற்றை இல்லாதவர்களுக்கு தானம் கொடுப்பார்கள். இதனால் ஆயுள் விருத்தி ஏற்பட்டு நீங்கள் பார்க்கும் வேலையில், வியாபாரத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டு மரணிப்பது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும். அதேபோல் கால்நடைகளுக்கும் உணவு வழங்கி புண்ணியம் சேர்க்கலாம்.
Also Read: ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால் இவ்வளவு பலனா?
இந்து சாஸ்திரத்தில் நெய் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. இதனை தானமாக கொடுப்பதால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக வெண்கல கிண்ணத்தில் சுத்தமான பசு நெய்யை தானமாக கொடுக்க வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது.
சிலர் இந்த நாளில் எள் தானமும் செய்கிறார்கள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் எள்ளை தானமாக வழங்குவதால் நவகிரக தோஷங்கள் மற்றும் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)