Food Recipes: கோடையில் குதூகல ரெசிபி! சூப்பரான சில்லி சிக்கன் இப்படி செய்து பாருங்க..!
Chilli Chicken Recipe: கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு சுவையான சில்லி சிக்கனை எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இந்த செய்முறை விளக்குகிறது. எலும்பில்லாத சிக்கன், வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், மசாலா பொடிகள் போன்ற பொருட்கள் தேவை. சிக்கனை மசாலா கலவையில் ஊற வைத்து, பின்னர் வறுத்து, வதக்கிய வெங்காயம், மிளகாய் கலவையுடன் சேர்த்து சமைக்க வேண்டும். சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த சில்லி சிக்கன், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

சில்லி சிக்கன் செய்முறை
கோடை விடுமுறை (Summer Holidays) என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சிறுவர்களும் தங்களது பெற்றோர்களிடம் ஏதாவது ஒன்றை சாப்பிட செய்து தரம்படி அடம் பிடிப்பார்கள். இதனால், பெற்றோர்கள் என்ன செய்வது, எப்படி செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். நம் வீட்டு பிள்ளைகளுக்கு அவ்வபோது சிக்கன், மீன் போன்ற புரதச்த்து நிறைந்த உணவுகளை கொடுப்பது முக்கியம். பெரும்பாலான சிறுவர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அந்தவகையில், இன்று நாம் எளிதான முறையில் வீட்டிலேயே சில்லி சிக்கன் (Chilli Chicken) எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். குறிப்பாக சிறுவர், சிறுமிகளுக்கு சில்லி சிக்கன் மிகவும் பிடிக்கும்.
சில்லி சிக்கன்:
தேவையான பொருட்கள்:
- எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
- நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 கப்
- நறுக்கிய பச்சை வெங்காயம் – ஒரு கைப்பிடி
- நறுக்கிய குடை மிளகாய் – ஒரு கப்
- கான்பிளார் மாவு – அரை கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- மிளகு பொடி – 1 ஸ்பூன்
- வினிகர் – 2 ஸ்பூன்
- எண்ணெய் – அரை கப்
- முட்டை – 1
- சோயா சாஸ் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
சில்லி சிக்கன் செய்வது எப்படி..?
- சில்லி சிக்கன் செய்ய முதலில் கடைகளில் வாங்கிய சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்றாக தண்ணீர் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- இதன்பிறகு, பெரிய பாத்திரத்தை எடுத்துகொண்டு அதில் கான்பிளார் மாவு, உடைத்து ஊற்றிய முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், மிளகு பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் நன்றாக கலக்கி, சிறிது நேரம் ஊற விடவும்.
- சிக்கன் எவ்வளவு நன்றாக ஊறுகிறதோ, அதை பொறுத்து சிக்கன் நன்றாக வேகும். கூடுதல் சுவையை கொடுக்கும். அதன் அடிப்படையில், குறைந்தது சிக்கனை 20 நிமிடங்கள் நன்றாக ஊறவிடுங்கள்.
- இதற்குபிறகு, கேஸ் அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து சூடாகும் வரை காத்திருங்கள். அதன்பிறகு, மிதமான தீயில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாக்கப்பட்ட பிறகு, ஊற வைத்த சிக்கனை போட்டு நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- இப்போது மற்றொரு கடாயை வைத்து என்ணெய் ஊற்றி சூடானது, அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பூண்டு நன்றாக வதங்கி, அதன் வாசனை வெளியே வர தொடங்கியதும் வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து 15-20 விநாடிகள் வதக்கவும்.
- தொடர்ந்து, சோயா சாஸ், பச்சை மிளகாய் சாஸ், வினிகர், மிளகு தூள் சேர்த்து நன்றாக ஒரு கிளறு கிளறியதும், ருசிக்கேற்ப உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து, 3 முதல் 5 நிமிடங்கள் அதிக தீயில் கிளறவும்.
- கடைசியாக, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 முதல் 7 அளவில் கிளறி இறக்கினால் சுவையான சில்லி சிக்கன் ரெடி.