Fruit Peel Uses: பழத்தோல்களை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க.. இவ்வளவு நல்ல விஷயங்களை செய்யலாம்..!
Amazing Fruit Peel Benefits: பழத்தோல்களை வீணாக்காமல் பல வழிகளில் பயன்படுத்தலாம். எலுமிச்சை, ஆரஞ்சு தோல்கள் வீட்டுச் சுத்தம் செய்ய உதவும். வாழைப்பழத் தோல்கள் தாவர வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஆப்பிள் தோல்கள் சருமப் பராமரிப்புக்கு பயன்படும். மாதுளைத் தோல் முகப்பருவை குறைக்க உதவும். மாம்பழத் தோல் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பெரும்பாலானோர் பழங்களை (Fruits) சாப்பிட்ட பிறகு, அவற்றின் தோல்களை குப்பையில் வீசுகிறோம். ஆனால் அவற்றின் தோல்கள் பல வீடு சுத்தம், முக பராமரிப்பு போன்றவற்றிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கையாகவே பழத்தோல்களில் உள்ள எண்ணெய்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், சருமம் (Skin) மற்றும் கூந்தலுக்கு (Hair) மிகவும் நன்மை பயக்கும். மேலும், வீட்டை சுத்தம் செய்தல் மற்றும் தோட்டக்கலை போன்ற விஷயங்களுக்கும் அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். அதேபோல் பழத்தோல்களை கொண்டு சுத்தம் செய்தல், பூச்சிகளை விரட்டுதல் என எதுவாக இருந்தாலும், இந்த தோல்களை சரியாகப் பயன்படுத்துவது உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதுதான். அதன்படி, எந்தெந்த பழங்களின் தோல்களை வைத்து நாம் என்ன செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்கள்:
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களில் சிட்ரிக் அமிலம் மற்றும் இயற்கை எண்ணெய்கள் அதிகமாக உள்ளது. இந்த தோல்களை ஒரு ஜாடியில் போட்டு வினிகர் கலந்து சில நாட்கள் வைக்கலாம். அதன் பின்னர், அந்த திரவத்தை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இந்த தண்ணீரை கொண்டு சமையலறை மேடை, சிங்க், மைக்ரோவேவ் மர்றும் குளியலறையை சுத்தம் செய்ய எளிதாகப் பயன்படுத்தலாம்.
வாழைப்பழத் தோல்கள்:
வாழைப்பழத் தோல்களில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. இவை தோட்டத்தில் உள்ள தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதன்படி, வாழைப்பழ தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளலாம். அதன்பிறகு, இவற்றை நேரடியாக மண்ணில் தூவலாம். இதை செய்வதன்மூலம், தாவரங்கள் நல்ல வளர்ச்சியை தரும். இது தவிர, லெதர் காலணிகள் அல்லது லெதர் பைகளை வாழைப்பழத் தோலால் தேய்ப்பது அவற்றிற்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.
ஆப்பிள் தோல்கள்:
ஆப்பிள் தோல்களில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளன. இவை சருமத்திற்கு நிறமூட்டியாகவும், புத்துணர்ச்சியையும் தரும். இந்த தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து, பின்னர் அந்த தண்ணீரை ஒரு பஞ்சு உருண்டையின் உதவியுடன் முகத்தில் தடவவும். இந்த ஆப்பிள் தண்ணீர் சருமத்தை மென்மையாகவும் சுத்தமாகவும் மாற்ற உதவி செய்யும்.
மாதுளைத் தோல்கள்:
மாதுளைப்பழ தோல்களை உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் அல்லது தயிர் சேர்த்து ஃபேஸ் பேக்காக போடலாம். இது முகத்தில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது.
மாம்பழத்தோல்கள்:
மாம்பழத்தோலில் முடி வளர்க்கும் இயற்கை எண்ணெய்களும் உள்ளன. இந்த தோல்களை அரைத்து, தயிரில் கலந்து, தலைமுடியில் தடவவும். இது முடி உதிர்தலைக் குறைத்து முடியை மென்மையாக்க உதவும்.
சிட்ரஸ் பழத்தோல்கள்:
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களின் தோல்களில் இருந்து வெளிப்படும் வாசனை கொசுக்கள் வராமல் தடுக்கும். இந்த தோல்களை உலர்த்தி, குறைந்த தீயில் மெல்ல எரிக்கலாம். இதை மாலையில் செய்வதன்மூலம் கொசுக்கள் தொல்லை இருக்காது.