உலகையே வண்ணமயமாக்கும் 6 அற்புதமான மலர்ச் சுற்றுலாத் தலங்கள்

Bloom With Beauty In Spring: வசந்த கால மலர்ச் செழிப்பைக் காண உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெதர்லாந்தின் துலிப் மலர்களும் ஜப்பானின் செர்ரி பிளாசம் மலர்களும் வசந்த காலத்தின் தொடக்கத்தை அழகாகப் பறைசாற்றுகின்றன. இந்தியாவின் இமயமலைப் பள்ளத்தாக்கு மற்றும் பிரான்சின் லாவண்டர் வயல்கள் இயற்கையின் வண்ணத் திருவிழாவாகத் திகழ்கின்றன.

உலகையே வண்ணமயமாக்கும் 6 அற்புதமான மலர்ச் சுற்றுலாத் தலங்கள்

மலர்ச் சுற்றுலாத் தலங்கள்

Published: 

15 Apr 2026 10:40 AM

 IST

குளிர் காலத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, இயற்கை அன்னை தனது வண்ணங்களை வாரி இறைக்கும் வசந்த காலம் தற்போது பல நாடுகளில் தொடங்கியுள்ளது. செடிகளும் கொடிகளும் துளிர்விட்டு, பூக்கள் பூத்துக் குலுங்கும் இந்த அழகைக் காண்பதற்கே மக்கள் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காகவே ‘புளோராடூரிசம்’ (Floratourism) என்ற புதிய பயண முறை உலக அளவில் பிரபலமாகி வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நிகழும் இந்த இயற்கையின் அதிசயத்தை ரசிக்க, உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

நெதர்லாந்தின் கண்கவர் துலிப் மலர் தோட்டங்கள்

நெதர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது துலிப் மலர்கள்தான். மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதத் தொடக்கம் வரை, நெதர்லாந்தின் கிராமப்புறங்கள் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலர்களால் போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கும். குறிப்பாக லிஸ்ஸே பகுதியில் உள்ள ‘கியூகென்ஹாஃப்’ (Keukenhof) தோட்டம் உலகப் புகழ்பெற்றது. இங்கு சுமார் 70 லட்சம் மலர்ச் செடிகள் நடப்பட்டு, ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் முழுமையாகப் பூத்துக் குலுங்கும். இந்த அழகைக் காண இதுவே சரியான தருணமாகும்.

ஜப்பானின் கலாச்சார அடையாளமான செர்ரி பிளாசம்

ஜப்பான் நாட்டின் கலாச்சாரத்தோடு இணைந்தது ‘சகுரா’ எனப்படும் செர்ரி பிளாசம் மலர்கள். டோக்கியோ மற்றும் கியோட்டோ போன்ற நகரங்களில் உள்ள பூங்காக்கள் மற்றும் நதிக்கரைகள் முழுவதும் இளஞ்சிவப்பு நிறப் போர்வையைப் போர்த்தியது போன்ற தோற்றத்தைத் தரும். ஜப்பானிய மக்கள் இந்த மலர்களைப் ரசிப்பதையே ‘ஹனாமி’ (Hanami) என்ற திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த மலர் சீசன், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் அழகையும் பறைசாற்றுகிறது.

பிரான்சின் ஊதா நிற லாவண்டர் வயல்கள்

கோடைக் காலத்தின் தொடக்கத்தில், பிரான்ஸ் நாட்டின் புரோவென்ஸ் (Provence) பகுதி முழுவதும் ஊதா நிறமாக மாறிவிடும். இங்குள்ள மலைச்சரிவுகளில் பயிரிடப்பட்டுள்ள லாவண்டர் மலர்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரவிக்கிடக்கும். இந்த மலர்களின் நறுமணம் அந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும். குறிப்பாக ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை இங்கு செல்வது மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தைத் தரும்.

இந்தியாவின் இமயமலையில் மலர் பள்ளத்தாக்கு

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலைச் சாரலில் அமைந்துள்ள ‘மலர் பள்ளத்தாக்கு’ (Valley of Flowers) ஒரு சொர்க்கலோகமாகும். பருவமழைக்கு பிறகு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இங்குள்ள புல்வெளிகளில் அல்பைன் வகை மலர்கள் ஆயிரக்கணக்கில் பூத்துக் குலுங்கும். பனி மூடிய மலைகளுக்கு நடுவே வண்ண மலர்களைக் காண்பது ஒரு தனித்துவமான அனுபவம். இப்பகுதியை அடைய மலையேற்றம் செய்ய வேண்டும் என்பது சவாலான விஷயம் என்றாலும், அந்த அழகு அனைத்தையும் மறக்கச் செய்துவிடும்.

இத்தாலியின் சூரியகாந்தி வயல்கள் மற்றும் கலிபோர்னியாவின் பூக்கள்

இத்தாலியின் டஸ்கனி பகுதியில் கோடைக் காலத்தில் சூரியகாந்தி பூக்கள் வயல்வெளிகளை மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கச் செய்யும். திராட்சைத் தோட்டங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பண்ணை வீடுகளுக்கு நடுவே இந்த மலர்கள் காண்போரைக் கவரும். அதேபோல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் ஆண்டுகளில் ‘சூப்பர்ப்ளூம்’ (Superbloom) என்ற அதிசயம் நிகழும். பாலைவனப் பகுதிகள் கூட திடீரென பலவண்ணக் காட்டுப்பூக்களால் நிரம்பிவிடும். இது இயற்கையின் கணிக்க முடியாத ஒரு மாற்றமாகும்.

Follow Us
மீண்டும் போருக்கு தயாராகும் இஸ்ரேல் - பரபரப்பு தகவல்
ரயில் மூலம் கடத்தப்பட்ட 163 சிறுவர்கள்... துரிதமாக செயல்பட்டு மீட்கப்பட்ட சம்பவம்..
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!