Donald Trump Vs Elon Musk : அவர் புத்தியை இழந்துவிட்டார்.. எலான் மஸ்க் குறித்து கடுப்பான டிரம்ப்!
American President Donald Trump About Elon Musk | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் இடையே நல்ல நட்பு நீடித்து வந்த நிலையில், தற்போது அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் மாறி மாறி பொதுவெளியில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அமெரிக்கா, ஜூன் 07 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) மற்றும் டெஸ்லா நிறுவனரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் (Elon Musk) ஆகியோரது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்களது நட்பில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இருவரும் மாறி மாறி வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், எலான் மஸ்க் புத்தியை இழந்துவிட்டதாகவும், அவருடன் பேசுவதற்கு தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு மஸ்க் உடனான தனது நட்பில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் – எலான் மஸ்க் நட்பில் விரிசல் ஏற்பட்டது எப்படி?
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு சேகரித்தது, தேர்தல் பிரச்சாரத்திற்காக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியது என எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப்பை அதிபராக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் காரணமாக அவர்களுக்குள் நல்ல நட்பு நீடித்து வந்தது. இந்த நிலையில், தற்போது அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதாவது ஜுன் 5, 2025 அன்று டிரம்ப் One Big Beautiful Bill என்ற மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரி குறைப்பு அம்சங்கள் இடம்பெற்று இருந்த நிலையில், அது குறித்து பேசிய எலான் மக்ஸ், அந்த மசோதாவால் நாட்டின் கடன் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் ட்விட்டர் பதிவு
The Trump tariffs will cause a recession in the second half of this year https://t.co/rbBC11iynE
— Elon Musk (@elonmusk) June 5, 2025
தான் இயற்றிய மசோதா குறித்த எலான் மஸ்கின் கருத்து, டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அது குறித்து பேசிய டிரம்ப், எலான் மஸ்க் எனக்கு எதிராக நிற்பது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதை அவர் பல மாதங்களுக்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டும். இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறந்த மசோதா. இது அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும் தொகையை மிச்சப்படுத்தும் என கூறி இருந்தார். இதனை தொடர்ந்து பேசிய மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவருக்கு பதிலாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அதிபராக பதவியேற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக உலக வர்த்தகமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் புத்தியை இழந்துவிட்டார் – டிரம்ப் காட்டம்
இந்த நிலையில் எலான் மஸ்க் குறித்து பேசியுள்ள டொனால்ட் டிரம்ப், அவர் புத்தியை இழந்துவிட்டார். மஸ்க் உடன் பேசுவதற்கு எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. மஸ்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கி வரும் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்ய போவதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.