மத்திய பட்ஜெட் 2026: ஹல்வா விழா என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன?
Union Budget 2026: ஹல்வா விழா என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாகும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026–27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்வதற்கு முன் இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், நார்த் ப்ளாக் வளாகத்தில் உள்ள பெரிய கடாயில் ஹல்வா தயாரிக்கப்பட்டு, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
ஜனவரி 25, 2026: மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், நிதி அமைச்சகத்தின் மூடிய கதவுகளுக்குள் ஒரு சிறியதாயினும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதுவே ஹல்வா விழா. இந்த விழா, பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டின் இறுதி தயாரிப்பு கட்டம் தொடங்கியதை குறிக்கும் ஒரு மரபாகும்.
இந்த ஆண்டுக்கான ஹல்வா விழா, பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக, அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த விழாவுடன், பட்ஜெட் அச்சிடும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் (Quarantine / Lock-in) காலமும் தொடங்குகிறது. இந்த அச்சிடும் பணிகள் பொதுவாக நிதி அமைச்சக வளாகத்தில் உள்ள அச்சகத்தில் நடைபெறும்.
ஹல்வா விழா என்றால் என்ன?
ஹல்வா விழா என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாகும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026–27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்வதற்கு முன் இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், நார்த் ப்ளாக் வளாகத்தில் உள்ள பெரிய கடாயில் ஹல்வா தயாரிக்கப்பட்டு, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: தேசிய வாக்காளர் தினம்.. இளைஞர்கள் ஜனநாயகத்தின் உயிர்நாடி – கடிதம் எழுதிய பிரதமர் மோடி..
ஹல்வா விழா எங்கு நடைபெறுகிறது?
இந்த விழா, மத்திய டெல்லியில் உள்ள நார்த் ப்ளாக் கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள நிதி அமைச்சக வளாகத்தில் நடைபெறுகிறது. இங்குதான் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கான பாதுகாப்பான அச்சகம் அமைந்துள்ளது.
ஹல்வா விழாவின் முக்கியத்துவம்
ஹல்வா விழா, பட்ஜெட் அச்சிடும் பணிகள் தொடங்கியதைக் குறிக்கிறது. இதன் பிறகு, பட்ஜெட்டில் எந்த முக்கிய மாற்றங்களும் செய்யப்படுவதில்லை.
1980ஆம் ஆண்டு முதல், நார்த் ப்ளாக் அடித்தளத்திலேயே பட்ஜெட் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பல மாதங்களாக உழைத்து பட்ஜெட்டை தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளை கொண்டாடும் நிகழ்ச்சியாகவும் இந்த விழா கருதப்படுகிறது.
Lock-in கட்டம் என்றால் என்ன?
ஹல்வா விழாவைத் தொடர்ந்து, பட்ஜெட்டுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் Lock-in எனப்படும் தனிமைப்படுத்தல் காலத்திற்குள் செல்கிறார்கள். இந்த காலத்தில், பட்ஜெட் தொடர்பான ரகசிய தகவல்கள் வெளியே கசிவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவர்கள் வெளியுலக தொடர்புகளை முற்றிலும் துண்டிக்கின்றனர்.
இந்த காலகட்டத்தில், அவர்கள் நிதி அமைச்சக வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். குடும்பத்தினருடனும் வெளியுலகத்துடனும் தொடர்பு கொள்ள அனுமதி இல்லை.
நிதியமைச்சர் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னரே, அவர்கள் நார்த் ப்ளாக் வளாகத்தை விட்டு வெளியே செல்ல முடியும்.
பொதுவாக, ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் ஹல்வா விழா நடைபெறும். கடந்த ஆண்டு, இந்த விழா ஜனவரி 24 அன்று நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு, 2026–27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது அவரது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட் ஆகும். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.4 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் ஜனவரி 28 அன்று தொடங்கி பிப்ரவரி 13 அன்று நிறைவடையும். இதனைத் தொடர்ந்து இடைவேளை விடப்பட்டு, பின்னர் இரண்டாம் கட்ட கூட்டத் தொடர் நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜனவரி 9 அன்று தெரிவித்தார்.