‘1,000 ஆண்டுகள்’.. தாக்குதல்களையும் தாண்டி நிலைத்து நிற்கும் சோமநாதர் கோயில்.. பிரதமர் மோடி பகிர்ந்த நினைவுகள்..
PM Modi On Somnath Temple: பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையும் பக்தியும் அந்தக் கோயிலை நோக்கி திரண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் பலமுறை கோயிலை அழித்த துயரச் சம்பவங்களையும் நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களின் நோக்கம் பக்தி அல்ல, அழிவே என சுட்டிக்காட்டியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
ஜனவரி 5, 2026: இந்தியாவின் ஆன்மிக மற்றும் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் சோமநாதர் கோயிலின் ஆயிரம் ஆண்டுகால பாரம்பரியமும் அதன் மீளுருவாக்கமும் இந்தியாவின் தளராத தன்னம்பிக்கைக்கு சான்றாக உள்ளன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கி.பி.1026 ஆம் ஆண்டு சோமநாதர் கோயில் மீது நடைபெற்ற முதல் தாக்குதலுக்கு ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறும் தருணத்தை முன்னிட்டு அவர் எழுதிய வலைப்பதிவில், சோமநாதர் கோயிலை இந்திய நாகரிக மற்றும் ஆன்மிக வலிமையின் காலத்தால் அழியாத சின்னமாக வர்ணித்துள்ளார். பலமுறை அழிக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் அந்த கோயில், இந்தியாவின் திடமான மனோபலத்தை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோம்நாத் கோயில்:
கி.பி.1026 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக சோமநாதர் கோயில் அழிக்கப்பட்டது என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், ஆயிரம் ஆண்டுகள் கடந்த இன்றும் குஜராத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள பிரபாஸ் பட்டணத்தில் அந்த கோயில் புதுப் பொலிவுடன் திகழ்ந்து வருவதாக கூறியுள்ளார். சோமநாதரை “இந்திய ஆன்மாவின் நித்திய அறிவிப்பு” என வர்ணித்த பிரதமர், துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்படும் 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையானதாக சோமநாதர் விளங்குவதை எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவின் ஆன்மிக வலிமைக்கு சான்றாக நிற்கும் சோம்நாத் கோயில்:
Jai Somnath!
2026 marks 1000 years since the first attack on Somnath took place. Despite repeated attacks subsequently, Somnath stands tall! This is because Somnath’s story is about the unbreakable courage of countless children of Bharat Mata who protected our culture and…
— Narendra Modi (@narendramodi) January 5, 2026
பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையும் பக்தியும் அந்தக் கோயிலை நோக்கி திரண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் பலமுறை கோயிலை அழித்த துயரச் சம்பவங்களையும் நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களின் நோக்கம் பக்தி அல்ல, அழிவே என சுட்டிக்காட்டியுள்ளார். மகமூத் கஜ்னியின் முதல் தாக்குதலுக்கு ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறும் 2026 ஆம் ஆண்டு, சோமநாதர் கோயில் இன்னும் நிலைத்து நிற்பது இந்தியாவின் ஆன்மிக வலிமைக்கும் பொறுமைக்கும் சான்றாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
“சோமநாதர் கோயில் ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமல்ல, கடற்கரையில் அமைந்திருந்ததால் பொருளாதார வலிமை கொண்ட சமூகத்துக்கும் உறுதுணையாக இருந்தது. கடல் வழி வணிகர்கள் அதன் பெருமைகளை உலகமெங்கும் எடுத்துச் சென்றனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் சோமநாதரின் கதை அழிவால் அல்ல, பாரத மாதாவின் கோடானுகோடி பிள்ளைகளின் உடைக்க முடியாத துணிச்சலால் எழுதப்பட்டுள்ளது” என பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்தார்.
பழங்காலம் முதலே சோமநாதர் கோயில் பல மதங்களையும் மரபுகளையும் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நூற்றாண்டுகளுக்கு முன் அங்கு வந்த ஜைன மதத் துறவி காலிகால சர்வஜ்ஞ ஹேமச்சந்திராசார்யர் அங்கு வழிபட்ட பின் உச்சரித்த ஒரு ஸ்லோகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். அந்த ஸ்லோகத்தின் பொருள், “உலகிய ஆசைகளின் விதைகள் முற்றிலும் அழிந்தவனுக்கும், பற்றும் துயரங்களும் சிதைந்தவனுக்கும் வணக்கம்” என்பதாகும் என விளக்கினார்.
1000 ஆண்டுகளாக பிரகாசமாக திகழும் சோமநாத் கோயில்:
இன்றும் சோமநாதர் கோயில் மனித மனத்தையும் ஆன்மாவையும் ஆழமாகத் தூண்டும் சக்தி கொண்டதாக இருப்பதாக பிரதமர் கூறினார். கி.பி.1026 ஆம் ஆண்டின் தாக்குதலுக்கு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், சோமநாதரின் கடல் அலைகள் அதே வேகத்துடன் கரையை மோதிக் கொண்டிருப்பதாகவும், அந்த அலைகள் போலவே எந்தச் சூழலிலும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் கதையை அந்தக் கோயில் சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கடந்த கால ஆக்கிரமிப்பாளர்கள் இன்று வரலாற்றின் தூசியாகி விட்டனர். அவர்களின் பெயர்கள் அழிவின் அடையாளங்களாக மட்டுமே நினைவுகூரப்படுகின்றன. ஆனால் சோமநாதர் கோயில் இன்னும் பிரகாசமாக திகழ்ந்து, 1026 ஆம் ஆண்டின் தாக்குதலாலும் மங்காத நித்திய ஆன்மாவை நினைவூட்டுகிறது. வெறுப்பும் தீவிரவாதமும் தற்காலிகமாக அழிக்க முடியும்; ஆனால் நம்பிக்கையும் நல்லதின் மீது கொண்ட உறுதியும் நித்தியமாக உருவாக்கும் சக்தி கொண்டவை” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.