மணிப்பூரில் வன்முறையை கைவிட வேண்டும்.. வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற வேண்டும் – பிரதமர் மோடி..

PM Modi Visit To Manipur: பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்று மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ இந்த அரசு மணிப்பூர் மக்களுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும். அனைத்து குழுக்களும் தங்கள் கனவுகளை நனவாக்க அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் வன்முறையை கைவிட வேண்டும்.. வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி..

பிரதமர் மோடி

Updated On: 

13 Sep 2025 18:59 PM

 IST

மணிப்பூர், செப்டம்பர் 13, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13, 2025 தேதியான இன்று மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் இன கலவரம் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த மாநிலத்தில் அமைதி திரும்பி வருகிறது. அதன்பின் அந்த மாநிலத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணமாகும். மணிப்பூரில் மே 2023-ல் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்தும் மெய்தி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே இன மோதல்கள் வெடித்தன. வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையால் சுமார் 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். அவர்கள் இன்னும் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். பிரதமரின் முதல் நிறுத்தம் மலைகளில் உள்ள சூரசந்திரபூர் நகரத்தில் இருந்தது. அடுத்து கலாச்சாரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமான காங்கலா கோட்டைக்கு சென்றார்.

நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி:

மழை காரணமாக சூரசந்திரபூருக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்வதாக இருந்தது ரத்து செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். மணிப்பூரில் ரூ.70,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

மேலும் படிக்க: மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை.. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்..

மணிப்பூர் மக்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்:

அதன் பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மணிப்பூர் மக்களின் மன உறுதிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இவ்வளவு கனமழையிலும் நீங்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் வந்து உள்ளீர்கள். உங்கள் அன்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கனமழை காரணமாக எனது ஹெலிகாப்டர் இங்கு வர முடியவில்லை. ஆனால் ஹெலிகாப்டர் மூலம் வராமல் இருந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வழியில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தியபடி அனைவரும் எனக்கு அளித்த அன்பும் பாசமும் இந்த தருணத்தை என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. மணிப்பூர் மக்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.

மேலும் படிக்க: 10 பெண் அதிகாரிகள்.. உலகின் முதல் முப்படை சேவை கப்பல்.. சிறப்பம்சம் என்ன? எங்கெல்லாம் பயணிக்க உள்ளது?

வன்முறையை கைவிட்டு அமைதி வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்:


வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், மணிப்பூரில் இன்று நான் உங்களுடன் இருப்பதாக உறுதி அளிக்கிறேன். இந்த அரசு மணிப்பூர் மக்களுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும். அனைத்து குழுக்களும் தங்கள் கனவுகளை நனவாக்க அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வன்முறையை கைவிட்டு அமைதி வழக்குத் திரும்ப நான் அழைப்பு விடுக்கிறேன்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் மாறும். அதன் வளர்ச்சி நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் என்பதை நான் உறுதி செய்கிறேன். மணிப்பூரை அமைதி, வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன். மணிப்பூர் புதிய விடியலை நோக்கி உள்ளது. மக்கள் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்,” எனக் குறிப்பிட்டார்.

நேபாள பிரதமருக்கு எனது வாழ்த்துக்கள்:


அதனைத் தொடர்ந்து, நேபாளத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நேபாளம் இந்தியாவின் நட்பு நாடு, நெருங்கிய தோழி. நாம் பகிரப்பட்ட வரலாறு, நம்பிக்கை ஆகியவற்றால் இணைக்கப்பட்டுள்ளோம். மேலும் ஒன்றாக முன்னேறி வருகிறோம். இன்று நாட்டு மக்களின் சார்பாக, நேபாளத்தில் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு அவர் வழிவகுப்பார் என்று நான் நம்புகிறேன். நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா பதவி ஏற்றது, பெண்கள் அதிகாரமளிப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இன்று இதுபோன்ற நிலையற்ற சூழலிலும், ஜனநாயக விழுமியங்களை உச்சத்தில் வைத்திருக்கும் நேபாளத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன். கடந்த சில நாட்களாக நேபாள இளைஞர்கள், நேபாளத்தின் சாலைகளை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டி கடுமையாக உழைப்பதை காணலாம். அவர்களின் படங்களையும் சமூக ஊடகங்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் நேர்மையான சிந்தனையும், நேர்மையான பணியையும் ஊக்கமளிப்பதாக மட்டுமல்லாமல், நேபாளத்தின் புதிய எழுச்சியின் தெளிவான அறிகுறியாகவும் உள்ளன. நேபாளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு நான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டார்.