உஷார் மக்களே… கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்.. இரண்டு பேருக்கு தொற்று உறுதி!

Kerala Nipah Virus Outbreak : கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இரண்டு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி, உயிரிழந்துள்ளார். அவருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உஷார் மக்களே... கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்.. இரண்டு பேருக்கு தொற்று உறுதி!

கேரளா நிபா வைரஸ்

Updated On: 

04 Jul 2025 17:21 PM

கேரளா, ஜூலை 04 : கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் (kerala Nipah Virus) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமாக கேரளாவில் அடிக்கடி தொற்று நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகையை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸின் முதல் தொற்று கூட கேரள மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்

அதன்படி, கேரள மாநிலம் கோழிகோடு மாவட்டம் மலப்புரம் மங்கடா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 17 வயது சிறுமி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கோட்டக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. இதனை அடுத்து, 2025 ஜூன் 28ஆம் தேதி சிறுமி கோழிக்கோடு மருத்துவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனை அடுத்து, 2025 ஜூலை 1ஆம் தேதி சிறுமி உயிரிழந்தார். இதனை அடுத்து, சிறுமியின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், சிறுமி நிபா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் மாதிரி மேலும் உறுதிப்படுத்த புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பாலக்காட்டில் 38 வயது பெண் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை மோசமாக உள்ளது.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு நிபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பெண்ணிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும், இந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் தனிப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம், கேரளாவில் மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு, நிபா வைரஸ் தொற்று பரவி இருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நிபா வைரஸ் அறிகுறிகள்

நிபா வைரஸ் பாதிப்பு இருந்தால் தலைவலி, காய்ச்சல், வாந்தி, தொண்டை புண் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். மேலும், நரம்பு சார்ந்த பிரச்னைகள் கூட ஏற்படலாம். உடலில் நிபா வைரஸ் பரவி இரண்டு வாரங்களுக்கு பிறகு, இந்த அறிகுறிகள் தென்படத் தொடங்கும் என சொல்லப்படுகிறது. நிபா வைரஸுக்கு எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை. எனவே, நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.