மனித மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் கிளாசிக் பாடல்களின் ராகங்கள்.. ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு!
Indian Classical Ragas Boost Brain Function | இந்திய கிளாசிக்கல் பாடல்களில் இடம்பெறும் ராகங்கள் மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ஐஐடி நடத்திய ஆய்வில் இது குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆய்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்திய கிளாச்சிக்கள் பாடல்களில் (Classical Songs) இடம்பெறும் ராகங்கள் மனித மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த கூடும் என்று சமீபத்தில் ஐஐடி (IIT – Indian Institute of Technology) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமன்றி, ராகங்கள் உணர்ச்சி ரீதியிலான கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாகவும், மனு உறுதியை வலுப்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிளாச்சிக்கள் பாடல்களில் இடம்பெறும் ராகங்களால் மனித மூளை மற்றும் உணர்ச்சியில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய இசையில் முக்கியத்துவம் வாய்ந்த ராகங்கள்
இந்திய கலாச்சாரத்தில் இசை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான இசை உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இலக்கணமே மூன்று பிரிவுகளாக வரையறுக்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழ் இலக்கியத்தின் மூன்று முக்கிய அம்சங்களாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு மொழியோடும் இசை கலந்துள்ள நிலையில் இசை கலாச்சார சிறப்பும், பாரம்பரியமும் கொண்டதாக உள்ளது. இந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தாண்டி இந்திய இசையின் மகத்தான மற்றொரு அம்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிவியலாக தனித்து நிற்கும் இந்திய இசை
இந்திய பாரம்பரிய இசை மிக சிறந்த கலை வடிவம் கொண்டது மட்டுமன்றி, உணர்ச்சி மற்றும் அறிவியலாகவும் தனித்து நிற்கிறது என்று ஐஐடி மண்டியின் இயக்குநர் மற்றும் பேராசிரியர் லஷ்மிதர் பெஹெரா தெரிவித்துள்ளார். இந்திய இசையில் உள்ள ஒவ்வொரு ராகமும் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளை தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் மனதை பதற்றத்தில் இருந்து அமைதிக்கு கொண்டு செல்வதற்கும், குழப்பத்தில் இருந்து தெளிவுக்கும், மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கிறது என்று கூறியுள்ளார்.
மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் ராகம்
ராகங்கள் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 40 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் முடிவில் இந்திய கிளாச்சிக் இசை மூளையை எவ்வாறு நிலையாகவும், குறிக்கோளுடன் இயங்க வேண்டும் என்பதை வழிகாட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், ராகங்களை கேட்கும்போது மூளையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய தலைமுறையில் மனிதர்கள் மத்தியில் மன அழுத்தம் மற்றும் குழப்பம் அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுவது மட்டுமன்றி மன நலத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் அம்சமாகவும் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.