சட்டவிரோத ஆன்லைன் பந்தய வலைத்தளங்கள்.. ஒரே நாளில் 242 பந்தய வலைத்தளங்களை தடை
இளைஞர்களை குறிவைத்து சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட வலைத்தளங்களை மத்திய அரசு கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. அரசாங்கம் ஒரே நாளில் 242 வலைத்தள இணைப்புகளைத் தடுத்துள்ளது மற்றும் இதுவரை 7,800 க்கும் மேற்பட்ட சட்டவிரோத தளங்களை அகற்றியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதும் பொருளாதார மற்றும் சமூக இழப்புகளைத் தடுப்பதும் இதன் நோக்கம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கோப்பு புகைப்படம்
ஜனவரி 16, 2026: சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட வலைத்தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒரே நாளில் 242 சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட வலைத்தள இணைப்புகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. அரசு வட்டாரங்களின் தகவலின்படி, இதுவரை நாடு முழுவதும் 7,800-க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட வலைத்தளங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் இணைய இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆன்லைன் கேமிங் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இவ்வகை சட்டவிரோத தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
242 சட்டவிரோத சூதாட்ட வலைத்தள இணைப்புகள் முடக்கம்:
Government of India today blocked 242 illegal betting and gambling website links. So far, over 7,800 illegal betting and gambling websites have been taken down, with a significant increase in enforcement actions after the passage of the Online Gaming Act. Today’s action reflects… pic.twitter.com/QcrPewcLxZ
— ANI (@ANI) January 16, 2026
இந்த சட்டவிரோத வலைத்தளங்கள் இளைஞர்களை குறிவைத்து, எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற வாக்குறுதிகளை அளித்து, அவர்களை சூதாட்டத்திற்கு அடிமைப்படுத்தி வருவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தனிநபர்களுக்கு பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதோடு, குடும்பச் சிக்கல்கள், மன அழுத்தம், சமூக குற்றங்கள் போன்ற பிரச்சினைகளும் அதிகரித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இவ்வகை சட்டவிரோத தளங்கள் மூலம் பணச் சுழற்சி (Money Laundering), வரி ஏமாற்று, சர்வதேச சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் போன்ற செயல்பாடுகளும் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதனைத் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
அதிகரிக்கும் கண்காணிப்பு:
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதும், இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தின் மோசமான தாக்கத்திற்கு ஆளாவதைத் தடுப்பதும் இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்களுக்கு விளம்பரம் செய்யும் சமூக வலைதள கணக்குகள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் மீதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்திலும், சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்கள் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், தேவையெனில் இணைய சேவை வழங்குநர்கள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களுடன் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வகை சட்டவிரோத தளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய வலைத்தளங்கள் குறித்து தகவல் கிடைத்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.