Pahalgam Attack: 1971க்கு பிறகு அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு
Centre's Alert to States : பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் மே 7ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் அவசரநிலை பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது 1971 இந்தியா–பாகிஸ்தான் போருக்குப் பிறகு நடைபெறும் மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

ஜம்மு காஷ்மீரின் (Jammu Kashmir) பஹல்காம் (Pahalgam) பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி – வாகா எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், 1960 இல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் எல்லை பகுதியில் கடந்த 11 இரவுகளாக இந்திய படைகள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இந்தியாவும் அதற்கேற்ப கடுமையாக பதிலளித்து வருகிறது.
மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு
இந்தியா – பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் 1971ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், வரும் மே 7, 2025 அன்று அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை பயிற்சிகளை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்த பயிற்சி, தீவிரவாதிகளின் தாக்குதலின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. விமானத் தாக்குதல் குறித்து எச்சரிக்கை சைரன்கள், முக்கிய இடங்களை மறைக்கும் ஏற்பாடுகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தல், மக்கள் இடம்பெயர்வு செய்வது குறித்து முடிவெடுப்பது போன்றவை இதில் அடங்கும்.
இந்த பயிற்சி 1971ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் போருக்குப் பின்னர் முதல் முறையாக நடைபெறுவதாகும். அதன்படி, தேசிய பாதுகாப்பு உறுதி செய்யும் நோக்கில் இது மிக முக்கியமான செயலாக கருதப்படுகிறது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே விமானப்படை, கடற்படை, தரைப்படை தலைமை அதிகாரிகளையும் சந்தித்துள்ளார். தாக்குதலை திட்டமிட்ட மற்றும் செயல்படுத்தியவர்கள் எதிர்பார்க்க முடியாத அளவிலான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் எம்பி ஷேர் அஃப்சல் கான் மர்வத், ஒரு செய்தியாளரிடம் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பேட்டியில், ‘இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், நான் எல்லைக்குச் செல்ல மாட்டேன். நேராக இங்கிலாந்துக்கு போய்விடுவேன்’ என அவர் கூறியுள்ளார். மேலும், ‘நரேந்திர மோடி என் அத்தையின் மகனா? நான் சொன்னால் விலகிக்கொள்வாரா?’ என்று அவர் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது பலர், “பாகிஸ்தானின் அரசியல்வாதிகளுக்கே தங்கள் ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை” என விமர்சிக்கின்றனர். மர்வத் முன்பு, இம்ரான் கானின் பாகிஸ்தான் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்தார். ஆனால் கட்சி மீது அடிக்கடி விமர்சனம் செய்ததற்காக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.