ஏசி, டிவி என எதுவும் வேலை செய்யவில்லை.. ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணியின் பதிவால் பரபரப்பு..

Plane Crash: ஏர் இந்தியா விமானத்தில் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் இருந்ததாகவும், ஏசி, டிவி என எதுவும் வேலை செய்யவில்லை என விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஆகாஷ் வட்ஸா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஏசி, டிவி என எதுவும் வேலை செய்யவில்லை.. ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணியின் பதிவால் பரபரப்பு..

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்

Published: 

12 Jun 2025 19:17 PM

ஏர் இந்தியா விமான விபத்து: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா (Air India) விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 230 பயணிகளுடன் 12 கேபின் க்ரூ நபர்களும் மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 133 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த விமான விபத்தில் குஜராத்தின் முன்னால் முதலமைச்சர் விஜய் ருபானி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் விமானத்தில் அசாதாரணமான நடவடிக்கைகள் இருந்ததாக அவர் கண்டறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் கோளாறு இருந்ததாக புகார்:


ஆகாஷ் வட்சா என்ற நபர் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில் ” இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் நான் இந்த விமானத்தில் இருந்தேன். டெல்லியில் இருந்து அகமதாபாத் வரை இந்த விமானத்தில் தான் நான் பயணம் மேற்கொண்டேன். இந்த விமான பயணத்தின் போது சில வழக்கத்திற்கு மாறான விஷயங்களை கண்டறிந்தேன். இது தொடர்பாக ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்க இருந்தேன்” என குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோ காட்சியில் விமானத்தில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை என குறிப்பிட்டு இருந்தார், அதேபோல் விமான இருக்கையில் இருக்கக்கூடிய தொலைக்காட்சி, இயர்போன் மற்றும் எந்த ஒரு பட்டனும் வேலை செய்யவில்லை எனவும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 242 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் ஆகாஷ் வட்சாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் கோளாறுகள் இருந்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லையா என்ற கோணத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தில் இருந்த விமானி மே டே அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே டே அழைப்பு என்பது விமானத்தில் அவசரகால உதவிக்காக விடுக்கப்படுவது.