Actor Soori: மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டிய சூரியை புகழ்ந்த வைரமுத்து!
சூரியின் புதிய திரைப்படம் "மாமன்" வெளியீட்டை முன்னிட்டு, சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதற்கு நடிகர் சூரி கடுமையான கண்டனம் தெரிவித்தார். இதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். மண் சோறு சாப்பிடுதலுக்கு செலவு செய்த பணத்தை ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சூரி குறிப்பிட்டிருந்தார்.

சூரி - வைரமுத்து
மாமன் (Maaman) பட ரிலீஸை முன்னிட்டு மண் சோறு சாப்பிட்ட தனது ரசிகர்களை கடுமையாக கண்டித்த நடிகர் சூரிக்கு (Actor Soori) கவிப்பேரரசு வைரமுத்து (Vairamuthu) பாராட்டு தெரிவித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ திரைக்கலைஞரான தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்படத்தின் வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; அந்த தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்கமுடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும். மண்சோறு தின்றால் ஓடாது. மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை ‘பலே பாண்டியா’ என்று பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
திரைக்கலைஞர்
தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாதுஇந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று… pic.twitter.com/PF7rEDPDY0— வைரமுத்து (@Vairamuthu) May 17, 2025
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி தற்போது கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தொடர்ந்து கருடன், விடுதலை 2 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவரின் 4வது படமாக “மாமன்” வெளியாகியுள்ளது. 2025, மே 16 ஆம் தேதி வெளியான இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையில் நடிகர் சூரிக்கும் மிகப்பெரிய பங்குள்ளது.
மாமன் படம் டைட்டிலுக்கு ஏற்றவாறு தாய் மாமனின் உறவை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த படமானது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. நடிகர் சூரியன் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து முதல் நாள் காட்சிகளை பார்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இப்படியான நிலையில் மதுரையில் சூரி ரசிகர்கள் சிலர் கோயிலில் வேண்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான கண்டனங்களை பெற்றது. இது தொடர்பாக சென்னை கமலா திரையரங்கில் படம் பார்க்க வந்த சூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ரசிகர்களாக இருக்க தகுதியில்லாதவர்கள்
அதற்கு பதில் அளித்த அவர், “மாமன் படம் வெற்றி அடைவதற்காக ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டதாக செய்தி அறிந்தேன். தம்பிகளா இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக வர வேண்டும், இதுபோல் செய்தால் அந்த செய்தி என் காதுக்கு வரும் என்ற ஆசையில் இதையெல்லாம் செய்கிறீர்கள். கதை நன்றாக இருந்தால் இந்த படம் ஓடும். அதை விட்டு மண் சோறு சாப்பிட்டால் எப்படி படம் ஓடும்?. மிகவும் வேதனையாக இருக்கிறது. இப்படி செய்பவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கவே தகுதி இல்லாதவர்கள்.
அந்த பணத்திற்கு மோர், உணவு தானம் செய்திருக்கலாம். தண்ணீர் வாங்கி கொடுத்திருந்தால் கூட சந்தோஷப்பட்டு இருப்பேன். நான் உணவை மிகவும் மதிக்கிறவன். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்து இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். ஒருவேளை உணவுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் என்பது எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த சாப்பாட்டிற்கு நீங்கள் மரியாதை கொடுக்கவில்லை. மாமன் படம் ரிலீஸாகிறதே என எந்த அளவுக்கு நான் சந்தோஷமாக இருந்தேனோ அந்த அளவுக்கு வேதனைப்படுத்தும் செயலாக இது அமைந்துள்ளது” என சூரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.