ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி
Urvashi about Rajinikanth : நடிகை ஊர்வசி தமிழில் தாவணிக் கனவுகள், பஞ்ச தந்திரம், சிவா மனசுல சக்தி, உத்தம வில்லன் என அவர் நடித்த கதாப்பாத்திரங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது குறித்து நடிகை ஊர்வசி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் கே.பாக்யராஜின் (K.Bhagyaraj) தாவணிக் கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஊர்வசி (Urvashi). முதல் படத்திலேயே அவருக்கு மிகவும் கனமான வேடம் கிடைத்தது. அவரும் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த வேடத்தை சிறப்பாக கையாண்டு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். விரைவிலேயே தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். நடிகைகள் என்றாலே அவர்கள் கிளாமர் ரோலுக்கு தான் செட்டாவர்கள் என்ற தமிழ் சினிமாவின் விதியை உடைத்து நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். குறிப்பாக ஒரு சில நடிகைகளுக்கு தான் காமெடி நன்றாக வரும். அந்த வரிசையில் காமெடியிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக ஜே பேபி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ஜே பேபி படத்தில் டைட்டில் ரோலில் நடித்து நடிப்பில் மிரட்டினார். அவரது நடிப்பு விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.
இளையராஜா இசையில் பாடிய ஊர்வசி
நடிகையாக இல்லாமல் பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் ஊர்வசி. தமிழில் மாயாபஜார் 1995 படத்தில் இளையராஜா இசையில் ஒரு ஊரிலே என்ற பாடலை பாடியிருக்கிறார். தமிழில் மைக்கேல் மதன காம ராஜன், மகளிர் மட்டும், பஞ்ச தந்திரம், உத்தம வில்லன் போன்ற பல படங்களில் கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த்துடன் ஜீவன போராட்டம் என்ற தெலுங்கு படத்தில் மட்டும் ஊர்வசி நடித்திருந்தார்.
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்?
இந்த நிலையில் ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், நான் கமல் சாருடன் அதிக படங்களில் நடித்தேன், எப்போது ரஜினி சாருடன நடிக்க போகிறீர்கள் என எல்லோரும் என்னை கேட்கிறார்கள். ரஜினி சாருடன் என்னால் அதிக படங்கள் செய்ய முடியவில்லை. ஒரு சில பாடல்களும் கவர்ச்சியான காட்சிகளுடன் வந்த வாய்ப்பகளை நான் மறுத்து விட்டேன். கால்ஷீட் காரணமாக சில படங்களை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என தெரிவித்தார்.
ஊர்வசி தற்போது மலையாளத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மலையாளத்தில் பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி படத்தில் நடிகர் திலீப்புடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் மே 9, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.