விஜய் முதல் விஜய் தேவரகொண்டா வரை… நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்த ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா
Actress Sai Pallavi: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது இந்தியில் ராமாயணா படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடிக்க மறுத்த முன்னணி நடிகர்களின் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நடிகை சாய் பல்லவி
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரவி மோகன் மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான் தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). அதனை தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார். குறிப்பாக உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சியிலும் நடிகை சாய் பல்லவி இறுதி வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய சாய் பல்லவி டாக்டர் பட்டத்தைப் பெற்றார். ஜார்ஜியாவில் டாக்டர் படிப்பை முடித்த அவர் இந்தியாவிற்கு வந்ததும் நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக டாக்டர் பணியை செய்யாமல் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதன்படி 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார்.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்தார். இதில் நிவின் பாலிக்கு மூன்று பருவங்களில் ஏற்படுக் காதலுக்கு ஏற்ப மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். இதில் கல்லூரியில் படிக்கும் போது நடிகை சாய் பல்லவியை நிவின் பாலி காதலிப்பார். எதிர்பாராத சூழல் காரணமாக இவர்கள் இருவரும் சேராமல் போய்விடுவார்கள்.
இந்த காதல் சேரவில்லை என்றாலும் படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்த நடிகை சாய் பல்லவி மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் படத்தில் நடித்திருந்தார். அதே போல தெலுங்கில் இறுதியாக நடிகர் நாக சைத்தன்யாவுடன் இணைந்து தண்டேல் படத்திலும் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களுமே திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது இந்தியில் ராமாயணா படத்தில் நடித்து வருகிறா. இந்தப் படத்தை இயக்குநர் நித்தேஷ் திவாரி இயக்கி வருகிறார்.
நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டா பதிவு:
ராமாயணா படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும் நடிகை சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வருகின்றனர். மற்றும் கேஜிஎஃப் படத்தின் புகழ் நடிகர் யாஷ இந்தப் படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலரின் படங்களில் நடிக்க மறுத்துள்ளது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் விஜயின் நடிப்பில் வெளியான லியோ, கார்த்தியின் நடிப்பில் வெளியான காற்று வெளியிடை, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் மற்றும் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்க்கரு வாரி பாட மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களிலும் நடிக்க மறுத்துள்ளார்.