Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்’ – வசந்தபாலன் அதிரடி

Vasanthabalan about Veyil Issue: இந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரமான ரவி மரியா பன்றி வளர்ப்பவராக காட்டப்பட்டிருப்பார். படம் வெளியான போது பெரிதாக கவனிக்கப்படாத நிலையில் பின்னாட்களில் பெரிதும் சர்ச்சையானது. குறிப்பாக மாமன்னன் படத்தில் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் பன்றி வளர்ப்பவராக காட்டப்பட்டபோது, சமூக வலைதளங்களில் பலரும் வெயில் படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் பன்றி வளர்ப்பவராக காட்டப்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டி விமர்சித்தனர்.

‘பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்’ – வசந்தபாலன் அதிரடி
வெயில் பட சர்ச்சை குறித்து பேசிய வசந்தபாலன்Image Source: Social Media
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Apr 2025 15:33 PM

இயக்குநர் ஷங்கரிடம் (Shankar) உதவி இயக்குநராக பணியாற்றி ஆல்பம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன் (Vasanthabalan). அவரது முதல் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற அளவுக்கு கமர்ஷியல் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு சற்று நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் இயக்கி படம் தான் வெயில் (Veyil). அதுவும் அவரது குருநாதர் ஷங்கர் தயாரித்த படம். காதல் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பரத், பசுபதி, ஸ்ரேயா ரெட்டி, பாவனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வெயில் படம் அதிகம் கவனிக்கப்படாத விருதுநகர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியிருந்த படம். வசந்த பாலனும் விருதுநகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகரின் வெயிலையும் மக்களின் வாழ்க்கையையும் தத்ரூபமாக பதிவாக்கியிருந்தார் வசந்தபாலன். இந்தப் படத்தில் இடம்பெற்ற வெயிலோடு விளையாடி பாடல் விருதுநகர் மாவட்டத்தின் தேசிய கீதமானது.

சிறுவயதில் தனது அப்பாவின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஊரை விட்டு ஓடிய பசுபதி, நீண்ட இடைவேளைக்கு பிறகு வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த மனிதராக மீண்டும விருதுநகர் வந்து இறங்குவார். அந்த காட்சி அதுவரை தமிழ் சினிமாவில் ஒரு எளிய மனிதரை  உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்தததில்லை என விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. வெயில் படம் தான் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். வெயிலோடு விளையாடி, காதல் நெருப்பின் நடனம், உருகுதே மருகுதே போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

வெயில் –  வசந்தபாலனின் வாழ்வில் நடந்த உண்மை கதை ?

கேன்ஸ், ஷாங்காய் போன்ற திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட இந்தப் படம் அனைவரது பாராட்டுக்களையும் குவித்தது.  இயக்குநர் ஷங்கரிடம், தான் உதவி இயக்குநராக பணியாற்றியபோது தனது குடும்பத்தை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை எனவும், தனது சகோதரர் தான் சகோதரிகளுக்கு திருமணம் செய்துவைப்பது போன்ற குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை முன்னின்று நடத்தியதாகவும் வசந்தபாலன் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பாதிப்பில் தான் இந்த கதையை உருவாக்கியதாகவும் வசந்தபாலன் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் தான் இயக்குநர் ரவி மரியா நடிகராக மாறி வில்லன் வேடங்களில் மிரட்டினார். பின்னர் காமெடி வில்லனாகவும் ஒரு ரவுண்ட் வந்தார். மேலும் இந்தப் படம் தான் இயக்குநர் ஜி.எம்.குமாருக்கும் நடிகராக நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பால் மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

வெயில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி

 

இந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரமான ரவி மரியா பன்றி வளர்ப்பவராக காட்டப்பட்டிருப்பார். படம் வெளியான போது பெரிதாக கவனிக்கப்படாத நிலையில் பின்னாட்களில் பெரிதும் சர்ச்சையானது. குறிப்பாக மாமன்னன் படத்தில் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் பன்றி வளர்ப்பவராக காட்டப்பட்டபோது, சமூக வலைதளங்களில் பலரும் வெயில் படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் பன்றி வளர்ப்பவராக காட்டப்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டி விமர்சித்தனர்.

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பவுண்டேசன் சார்பாக பி.கே.ரோசி திரைப்பட விழா ஏப்ரல் 2, 2025 தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், ”ரஞ்சித்தின் வருகைக்கு முன் தமிழ் சினிமாவில் தலித் பற்றிய பார்வை, சாதிய பற்றிய பார்வை, அதிகாரம் குறித்த பார்வை வேறு ஒன்றாக இருந்திருக்கிறது. நாகராஜ் மஞ்சுளேவின் வருகைக்கு பிறகு, தமிழில் பா.ரஞ்சித்தின் வருகைக்கு பிறகு, மாரி செல்வராஜின் வருகைக்கு பிறகு, மொத்த பார்வையும் மாறியிருக்கிறது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்கு இந்த மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில் சிறுபான்மையினரை, மூன்றாம் பாலினத்தவரை எப்படி கையாள வேண்டும் என்ற கவனத்தை ரஞ்சித் தனது கமர்ஷியல் படங்கள் வாயிலாக பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஞ்சித்தை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.