Dharmendra : நடிகர் தர்மேந்திரா நலமுடன் இருக்கிறார் – மகள் வெளியிட்ட பதிவு
பாலிவுட்டின் மிக முக்கிய குணச்சித்திர நடிகரான தர்மேந்திரா நலடமுடன் இருப்பதாக அவரது மகள் ஈஷா தெரிவித்துள்ளார். இன்று காலை அவர் மறைந்துவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில் அவரது மகள் நிராகரித்துள்ளார். அது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் தர்மேந்திரா
பழம்பெரும் இந்தி சினிமா நடிகர் தர்மேந்திரா உடல்நிலை காரணமாக காலமானதாக காலை முதல் தகவல்கள் வேகமாக பரவின. பல்வேறு தரப்பினர் உண்மைதன்மை தெரியாமல் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தன்னுடைய தந்தை நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தர்மேந்திரா மகள் ஈஷா தியோல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சோஷியல் மீடியா பதிவில், ஊடகங்களில் தவறான செய்தி பரவுகிறது. என் தந்தை நலமுடன் இருக்கிறார். அவர் மீண்டு வர பிரார்த்திப்பவர்களுக்கு நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.
தர்மேந்திரா
தர்மேந்திரா பாலிவுட்டை கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு நடிகர். 1960 ஆம் ஆண்டு “தில் பி தேரா ஹம் பி தேரே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, “ஷோலே,” “சீதா அவுர் கீதா,” “மேரா காவ்ன் மெர் தேஷ்,” “லோஹா,” மற்றும் பல படங்களின் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
மகள் கொடுத்த அறிவிப்பு
300க்கும் மேற்பட்ட படங்கள்
தர்மேந்திரா டிசம்பர் 8, 1935 அன்று பஞ்சாபில் உள்ள நஸ்ராலி கிராமத்தில் பிறந்தார். இந்த சிறிய கிராமத்திலிருந்து, அவர் பாலிவுட்டின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். அவர் தனது வாழ்க்கையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், மேலும் அவரது திரை நடிப்புகள் உலகளவில் பாராட்டப்பட்டன. அவர் இந்தி மற்றும் பஞ்சாபி சினிமாவிலும் சிறந்து விளங்கினார்.
தர்மேந்திரா நடிக்கும் படம்
தர்மேந்திரா தற்போதும் சினிமாவில் நடித்து வருகிறார். மீண்டும் அவரது அற்புதமான நடிப்புத் திறமையை திரையில் வெளிப்படுத்தும் விதமாக “21” என்ற படத்தில் நடித்துள்ளார். இது டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் நாயகனான அருண் கேத்ரபாலாக நடிக்கிறார். தர்மேந்திரா அவரது தந்தையாக நடிக்கிறார்.