Post Office Schemes : ரெப்போ வட்டி குறைந்தாலும், வட்டி குறையாத அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்!

Post Office Savings Schemes Interest Rates | ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், பல வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியை குறைத்துவிட்டன. ஆனால், அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்கிறது.

Post Office Schemes : ரெப்போ வட்டி குறைந்தாலும், வட்டி குறையாத அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

16 Jun 2025 18:28 PM

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank of India) கீழ் வரும். குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு ரெப்போ வட்டி விகிதம் (Repo Interest Rate) விதிக்கிறதோ அதனை மையப்படுத்தியே வங்கிகள் வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும். உதாரணமாக ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டங்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும். இதுவே ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால், வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் கடன்களுக்கான பாட்டியை குறைக்கும். இவ்வாறு ரெப்போ வட்டி விகிதம் குறைக்க மற்றும் உயர்த்தப்படுவதால் சிலருக்கு லாபமும், சிலருக்கு நஷ்டமும் ஏற்படும். ஆனால், இவ்வாறு திடீர் மாற்றங்கள் பாதிக்காத சிறந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது என்றால் அது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் (Post Office Saving Schemes) தான்.

அரசு செயல்படுத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டுக்காக (Investment) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை வழங்கினாலும், சிறந்த பலன்கள் மற்றும் அம்சங்களை கொண்ட சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நிலையான வைப்பு நிதி திட்டம், தொடர் வைப்பு நிதி திட்டம், அஞ்சலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மாதாந்திர வருமான திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு அரசு வட்டி நிர்ணயம் செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், பலரும் பாதுக்காப்பு கருதி இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மூன்று முறை ரெப்போ வட்டியை குறைத்துள்ளது. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.50 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. ஆனால், அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைக்காமல் வைத்துள்ளது.

அஞ்சலக திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைக்காத அரசு 

  • அஞ்சலக சேமிப்பு கணக்கு – 4 சதவீதம்
  • தேசிய சேமிப்பு சான்றிதழ் – 6.7 சதவீதம்
  • மாத வருமான திட்டம் – 7.4 சதவீதம்
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு – 8.2 சதவீதம்
  • பொது வருங்கால வைப்பு நிதி – 7.1 சதவீதம்
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா – 8.2 சதவீதம்
  • கிசான் விகாஸ் பத்ரா – 7.5 சதவீதம்
  • மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் – 7.5 சதவீதம்

இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளாமல் அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.