பண்டிகை காலங்களில் வங்கிகள் கடன் வழங்க முன்வருவது ஏன்?… கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Indian Bank Loan Offers | இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான வங்கிகள் விழா காலங்களின் போது சிறப்பு சலுகைகளுடன் கடன் வழங்குகின்றன. இதனை பொதுமக்கள் விழாக்களுக்கு வழங்கப்படும் கடன் என நினைக்கின்றனர். உண்மை அது அல்ல, விழாக்காலங்கள் மட்டுமன்றி, மேலும் சில காலங்களிலும் வங்கிகள் சிறப்பு அம்சங்களுடன் கடன் வழங்கும்.

பண்டிகை காலங்களில் வங்கிகள் கடன் வழங்க முன்வருவது ஏன்?... கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Jul 2025 12:51 PM

பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக (Financial Needs) வங்கிகள் மூலம் கடன் பெறுகின்றனர். கடன் பெறுவதற்காக பொதுமக்கள் பல வங்கிகளில் விண்ணப்பித்து காத்திருக்கும் சூழல்கள் உள்ள நிலையில், சில வங்கிகள் விழா காலங்களின் போது அதிரடி சலுகைகளுடன் கடன் வழங்க முன்வரும். இதன் காரணமாக விழா கால சலுகையாக வங்கிகள் கடன் வழங்க முன் வருவதாக பொதுமக்கள் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அது அப்படி அல்ல. விழா காலங்கள் மட்டுமன்றி, சில குறிப்பிட்ட காலங்களில் வங்கிகள் சிறப்பு சலுகைகள் உடன் கடன் வங்க முன்வரும். அது ஏன், எந்த எந்த காலக்கட்டங்களின் போது வங்கிகள் இவ்வாறு கடன் வழங்க முன்வரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விழா கால சலுகைகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டம் விழாக்காலமாக கருதப்படுகிறது. காரணம், இந்த காலக்கட்டத்தில் தான் இந்தியாவின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் விழாக்களை கொண்டாட அதிக பணம் செலவு செய்யும் நிலையில், வங்கிகள் குறைந்த வட்டி மற்றும் குறுகிய கால சலுகைகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளன.

  • குறைந்த செயலாக்க கட்டணம் அல்லது செயலாக்க கட்டணம் ரத்து – இதன் மூலம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை சேமிக்கலாம்.
  • விரைவான கடன் – இந்த காலக்கட்டத்தில் வங்கிகள் விரைவாக கடன் வழங்குகின்றன.
  • கூடுதல் சலுகைகள் – கூடுதல் சலுகையாக கேஷ் பேக், தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.

திருமண காலம்

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டம் திருமணத்திற்கானதாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அதிக திருமணங்கள் நடைபெறும் என்பதால் வங்கிகள் அதற்கு ஏற்ப கடன்களை வழங்கும். இந்த காலக்கட்டத்தின் போது வங்கிகள் மிக அதிக தொகையை ஒரு சில நாட்களில் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திருமணத்தை மையப்படுத்தியே வங்கிகள் விளம்பரம் செய்யும்.

ஆண்டு இறுதி டார்கெட்

ஒரு ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை கணக்கிடப்படும் நிலையில், நிதியாண்டு ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளுக்கு டார்கெட் நிர்ணயம் செய்யப்படும். அப்போது வங்கிகள் கூடுதல் சலுகைகள் உடன் பொதுமக்களுக்கு கடன் வழங்கும்.