மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
Mental Health Matters : உடல் ஆரோக்கியத்தை போல மனநல ஆரோக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான காப்பீட்டுத் திட்டங்கள் இன்னும் மருத்துவமனையில் அடிப்படை செலவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. மனநலம் சார்ந்த ஆலோசனை, சிகிச்சை, கலந்துரையாடல்கள் போன்றவை பல காப்பீடு திட்டங்களில் சேர்க்கப்படுவதில்லை.

மாதிரி புகைப்படம்
மனநலத்தின் முக்கியத்துவம் சமீபகாலங்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் மன அழுத்தம், மன பதட்டம் போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நிறைய பேருக்கு பணிச்சூழல் மிகுந்த அழுத்தம் நிறைந்ததாக மாறியிருக்கிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்குக்கு பிறகு, உளவியல் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்திருக்கிறது. ஒருவருக்கு உளவியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்போது அது அவரை மட்டும் பாதிப்பதில்லை, அவரது குடும்பத்தை, சமூகத்தை பாதிக்கிறது. இதனையடுத்து மனநலத்தை பாதுகாப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மனநலம் என்றால் என்ன?
மனநலம் என்பது ஒரு மனிதரின் உணர்வுகள், உளவியல், நடத்தை மற்றும் சமூக செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கிறது. ஒருவரின் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள், உறவுகள் ஆகியவற்றில் எப்படி செயல்படுகிறோம் என்பதைக் குறிக்கிறது. இவை அனைத்தும் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான அம்சங்களாக பார்க்கப்படுகிறது. மனநலப் பிரச்சனைகள் சிலருக்கு மரபணுக் காரணங்களால், சிலருக்கு வாழ்க்கையில் நிகழும் தாக்கம் மற்றும் நீண்டகால மன அழுத்தத்தால் ஏற்படலாம்.
இந்தியாவில் மனநல காப்பீடு
ஆஇந்தியாவில் மனநல காப்பீடு சட்டபூர்வமாக உள்ளது. மனநல சட்டம், 2017 மற்றும் IRDAI (Insurance Regulatory and Development Authority of India) யின் வழிகாட்டுதல்படி, அனைத்து மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களும் மனநலனை காப்பதையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அனைத்து காப்பீட்டுத் திட்டங்களும் மனநல நோய்களுக்கும் சிகிச்சை பெற உகந்ததாக இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது உடல் நோய்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுச் சேவைகளுடன் சமமாக மனநலக் கவனிப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
காப்பீடு பெறும்போது கவனிக்க வேண்டியது
மனநலனை சட்டபூர்வமாக காப்பீடு திட்டங்களில் சேர்த்தாலும், பல திட்டங்கள் இன்னும் மருத்துவ செலவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. மனநல ஆலோசனைகள் (therapy sessions), உளவியல் ஆலோசனைகள் போன்றவை பல திட்டங்கள் காப்பீட்டில் சேர்க்கப்படுவதில்லை. மேலும், காப்பீடு பெறும்போது மனநலக் குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து முன் நிலை நோய்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியம். இதை தவிர்த்தால் எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் கோரிக்கை நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
மனநலக் கவனிப்புக்கான காப்பீடு எப்படிப் பெறலாம்?
-
நீங்கள் ஏற்கனவே ஒரு மருத்துவக் காப்பீடு வைத்திருந்தால், உங்கள் காப்பீடு பெற்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டு மனநலக் கவரேஜ் உள்ளதா, அல்லது அதைச் சேர்க்க முடியுமா என்பதை உறுதி செய்யுங்கள்.
-
இல்லையெனில், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். தற்போது அதிகமான காப்பீடு நிறுவனங்கள் மனநல கவரேஜ் கொண்ட திட்டங்களை வழங்குகின்றன.
-
ஆனால், ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள நிபந்தனைகள், பயன்கள் மாறுபடக்கூடியவை. சில திட்டங்கள் ஆலோசனைக் கட்டணங்கள் மற்றும் மருந்துக் செலவுகளை மட்டுமே வழங்குகின்றன. எனவே, திட்ட ஆவணங்களை முழுமையாக படித்துப் புரிந்துகொள்வது அவசியம்.
கொரோனா காலகட்டத்துக்கு பின்பு மனநலத்தின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது இதை மையமாகக் கொண்டு மனநல நோய்களுக்கு மதிப்பளித்து சிகிச்சை பெறும் சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில், மனநல காப்பீடு குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியம்.