கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

Credit Card Risks : நம்மில் பலர் கிரெடிட் கார்டுகள் மூலம் அவசரத் தேவைகளுக்கு பணம் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதில் சில ஆபத்துகள் இருக்கலாம். குறிப்பாக கூடுதல் கட்டணங்கள், அதிக வட்டி விகிதங்கள் விதிக்கப்படலாம். கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் எடுப்பதால் உருவாகும் ஆபத்துகள் மற்றும் அவற்றை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

மாதிரி புகைப்படம்

Published: 

23 May 2025 23:01 PM

பலரும் அவசர பணத் தேவை ஏற்பட்டதும் கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் பணம் எடுத்து பயன்படுத்துவதை பார்த்திருப்போம். குறிப்பாக மாதத்தின் கடைசி தேதிகளில் நம் சம்பள பணம் எல்லாம் தீர்ந்துவிட்ட பின்னால் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் எடுத்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். சம்பளம் வந்தததும் சரியாக பணத்தை திருப்பி செலுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்வோம். கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது ஒரு விரைவான வழியாக இருக்கலாம். ஆனால் நாம் அப்படி செய்வதால் மறைமுகமாக விதிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் உயர்ந்த வட்டி விகிதங்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த கட்டுரையில், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் இதனால் ஏற்படும் அபாயங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கும்போது, பல வங்கிகள் 2.5 சதவிகிதம்  முதல் 3 சதவிகிதம் வரை பணம் எடுப்பதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன. இதற்க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.300 முதல் ரூ.500 வரை இருக்கலாம். உதாரணமாக, எச்டிஎஃப்சி வங்கி நாம் எடுக்கும் பணத்தையும் அது திருப்பி செலுத்தும் கால அளவையும் பொறுத்து 2.5 சதவிகிதம் அல்லது ரூ.500 என எது அதிகமோ அதைக் கட்டணமாக வசூலிக்கிறது.

வட்டி விகிதங்கள்

கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் எடுப்பதற்கான வட்டி விகிதங்கள் மாதத்திற்கு 2.5 சதவிகிதம் முதல் 3.9 சதவிகிதம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி, பணம் எடுத்த நாளிலிருந்து உடனடியாக கணக்கிடப்படுகிறது; எந்தவொரு கிரேஸ் பீரியடும் நமக்கு அளிக்கப்படுவதில்லை என்பதால் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு நாள் தாமதமானால் கூட நமக்கு வட்டியுடன் சேர்த்து செலுத்தப்பட வேண்டியிருக்கும். 

கூடுதல் கட்டணங்கள் மற்றும் அபாயங்கள்

  • நீங்கள் குறைந்தபட்ச தொகையைச் செலுத்தவில்லை என்றால், வங்கிகள் 15 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை தாமத கட்டணங்களை வசூலிக்கலாம்.

  • பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனைகள் மீது எந்தவொரு ரிவார்டு புள்ளிகளும் அல்லது கேஷ்பேக் போன்ற எந்த நன்மைகளும் வழங்கப்படமாட்டாது.

  • பணம் எடுப்பது உங்கள் கிரெடிட் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும், இது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கிரெடிட் கார்டில் பணம் எடுப்பதை தவிர்க்க என்ன செய்யலாம்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை தவிர்க்க, கீழ்க்கண்ட  செயல்களை முயற்சிக்கலாம்.

  • பல்வேறு வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் தனிப்பட்ட கடன்களை வழங்குகின்றன.
  •  பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை முன்பணமாக வழங்குகின்றன. எனவே பணத்தேவையின் போது அலுவலகங்களில் கேட்டுப் பார்க்கலாம். 

  • தேவையில்லாத செலவுகளைக் குறைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். இது இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு கைகொடுக்கும்.