Viral Video : திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
21 Crore Rupees Gift in Rajasthan Wedding | ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஒரு வகையான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில், திருமண விழா ஒன்றில் மணமகள் வீட்டார் சார்பில் ரூ.21 கோடி பணம் பரிசாக வழங்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

உலகின் எந்த மூலையில் அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான நிகழ்வு நடந்தாலும் சமூக ஊடகங்களின் உதவியால் அது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிடும். அந்த வகையில், ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமகள் வீட்டின் சார்பில் ரூ.21 கோடி பணம் பரிசாக கொடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணத்தில் வரதட்சனை வாங்க கூடாது என பலரும் வரதட்சனைக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தும், வலியுறுத்தியும் வரும் நிலையில், மணமகளின் வீட்டார் இவ்வளாவு பெரிய தொகையை பரிசாக கொடுத்தது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் ரூ.21 கோடி பணத்தை பரிசாக வழங்கிய மணமகள் குடும்பத்தினர்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் திருமணங்களின் போது மணமகள் வீட்டார் இடம் இருந்து வரதட்சனையாக நகை மற்றும் பணம் வாங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு வரதட்சனை கொடுப்பது சாதாரணமாக இருந்தாலும், ஏழ்மையான மற்றும் பொருளாதாரத்தின் பின் தங்கிய குடும்பங்களுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். அதுமட்டுமன்றி, வரதட்சணை வாங்குவது பெண்களுக்கு விலை கொடுப்பது போல உள்ளதாகவும் இது தவறான நடைமுறை என்றும் பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், ராஸ்தானில் திருமண விழாவின் போது மணமகள் வீட்டார் ரூ.21 கோடி பணத்தை வரதட்சணையாக கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், திருமணம் நடைபெறும் இடத்தில் உறவினர்கள் கூடி இருக்கின்றனர். அப்போது மணமகன் மற்றும் மணமகளை அமர வைத்து அவர்களுக்கு முன்னாள் சில பெட்டிகளில் பணத்தை அடுக்கி வைக்கின்றனர். மூன்று முதல் நான்கு பெட்டிகள் அவர்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த இடத்தில் பேசும் நபர் ஒருவர் மொத்தம் ரூ.21 கோடி பணம் இருப்பதாக அறிவிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவ்வளவு அதிக பணத்தை கொடுத்து சமூதாயத்திற்கு தவறான முன் உதாரணமாக மாற வேண்டாம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இதற்கு அந்த பெண் ஒரு தொழிலை தொடங்கியிருக்கலாம் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். பலர் இந்த விவகாரத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தாலும், சிலர் ஆதரவு அளிக்கும் வகையில் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.