நடுவானில் விமான கழிவறையில் புகை.. சிக்கிய தஞ்சாவூர் இளைஞர்!
Smoking in flight: குவைத் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒரு இளைஞர் புகை பிடித்ததால் கைது செய்யப்பட்டார். விமானத்தில் பலமுறை கழிவறைக்குச் சென்ற அவரைப் பணிப்பெண்கள் சந்தேகித்து, புகை பிடித்ததை கண்டுபிடித்தனர். அவரது செயலால் சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விமானத்தில் புகை பிடித்த இளைஞர்
சென்னை, ஆகஸ்ட் 19: குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இளைஞர் ஒருவர் புகை பிடித்த சம்பவம் சக பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடான குவைத்தில் இருந்து சென்னைக்கு 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 144 பயணிகள் பயணம் செய்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அடிக்கடி தனது இருக்கையில் இருந்து விழுந்து விமானத்தின் கழிவறைக்கு சென்று வந்துள்ளார். இதனை கண்காணித்த விமான பணிப்பெண்கள் என்னவென்று சோதனை செய்த போது அந்த இளைஞர் கழிவறையில் புகை பிடித்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் இளைஞரை கண்டித்தனர்.ஆனால் தான் புகை பிடித்ததில் எந்தவித தவறும் இல்லை என்பது போல் அந்த இளைஞர் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டார்.
தரையிறங்கியதும் கைது
உடனடியாக இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமான பணிப்பெண்கள் தகவல் தெரிவித்தனர். இப்படியான நிலையில் விமானம் சென்னையில் தரை இறங்கியதும் தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி அந்த இளைஞரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த இளைஞர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் முகமது என்பது தெரிய வந்தது.
Also Read: தரை இறங்கும்போது இண்டிகோ விமானத்தில் பரபரப்பு.. அலறிய பயணிகள்!
குவைத் நாட்டில் டிரைவராக பணியாற்றி வந்த இவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ஷேக் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடரும் சம்பவங்கள்
பொதுவாக பேருந்து, ரயில், விமானம் போன்றவற்றில் பயணிப்பவர்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்களும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டு வருகிறது. புகைப்பிடிப்பதால் தீ விபத்து போன்ற மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் மீறி சிலர் ஓடும் பேருந்து மற்றும் ரயில்களில் புகை பிடிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விரித்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
Also Read: திடீரென தீப்பிடித்து எரிந்த விமானத்தின் டயர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்.. என்னாச்சு?
கடந்த ஆண்டு கூட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய போது விமான நிலைய கழிவறையில் புகை பிடித்துள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் கழிவறைக்கு சென்று திரும்பும் போது அவர் மீது புகைபிடித்த நெடி வந்ததால் விமான பணிப்பெண்கள் என்னவென்று விசாரித்தனர். இதில் அவர் பொய் சொல்லவே அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட அந்த இளைஞர் தான் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என கடிதம் எழுதி கொடுத்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.