உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம்..

Ungaludan Stalin Scheme: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக நகர் புறங்களில் 3,768 முகாம்களும் ஊரகப்பகுதிகளில் 6232 முகாம்கள் என பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூலை 7, 2025) முதல் வீடு வீடாக சென்று தன்னார்வலர்கள் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம்..

கோப்பு புகைப்படம்

Published: 

07 Jul 2025 07:51 AM

சென்னை, ஜூலை 7, 2025: தமிழகத்தின் ஜூலை 15 2025 ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை சிதம்பரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதிலும் அரசு சேவைகள் வீடு தேடி மக்களை சென்றடையும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 2025 அன்று தொடங்கும் இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது 2025 நவம்பர் மாதம் வரை அதாவது மூன்று மாத காலங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று ஜூலை 7 2025 தேதியான இன்று தமிழகம் முழுவதும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. சென்னையில் மட்டும் ஆறு வார்டுகளை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் 400 முகாம்கள் நடத்த திட்டம்:

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ பெருநகர சென்னை மாநகராட்சியில் வருகின்ற ஜூலை 15 2025 ஆம் தேதி அன்று மாதவரம் மண்டலத்தில் வார்டு 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு 38 , திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டன் 143, அடையாறு மண்டலத்தில் வார்டு 168, ஆகிய ஆறு வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கி நடைபெற உள்ளது

இதனை ஒட்டி 2025 ஜூலை 7ஆம் தேதி முதல் ஆறு வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கப்படுகிறது. சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து மண்டலங்களிலும் இருக்கும் 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக ஆறு வார்டுகளில் முகாம்கள் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் இரண்டு முகாம்கள் என மொத்தம் 400 முகாம்கள் வருகின்றார் 15ஆம் தேதி முதல் 2025 அக்டோபர் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம்:

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக நகர் புறங்களில் 3,768 முகாம்களும் ஊரகப்பகுதிகளில் 6232 முகாம்கள் என பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்படுகிறது. அதேபோல் நகர்ப்புறங்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது,

இதில் மிக முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இந்த முகாமில் மட்டுமே கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் மீது அல்லது விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.