திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து.. 7 மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது தவெக அரசு!!
TVK Govt Cancels DMK-Era Tender: கடந்த திமுக ஆட்சியில் 7 மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்கள் அமைக்க வெளியிடப்பட்ட டெண்டரைத் த.வெ.க. அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் அரசு-தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படவிருந்த இந்தத் திட்டம் நிர்வாகக் காரணங்களைக் கூறி கைவிடப்பட்டுள்ளது.
சென்னை, அக்.17: தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றது முதல், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் டெண்டர்கள் குறித்து தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் பல முக்கிய டெண்டர்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான திட்டமான, 7 மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்கள் (Roadside Facility Centers) அமைக்கும் திட்டத்துக்காகக் கோரப்பட்ட டெண்டரைத் தற்போதைய த.வெ.க. அரசு நிர்வாகக் காரணங்களைக் கூறி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம் மூலம் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி.. நீலாங்கரை ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தாலி செயின் பறிப்பு..
கடந்த கால டெண்டர் விபரங்கள்:
மாநில நெடுஞ்சாலைகளைத் தரம் உயர்த்துவதற்கும், நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் மூலமாகப் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் தேவையான அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய சாலையோர வசதி மையங்களை அமைக்க அப்போதைய அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக விழுப்புரம், திருப்பூர், திருவள்ளூர், திருப்பத்தூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சாலை வழித்தடங்களில் அரசு-தனியார் பங்களிப்பு முறையில் இந்த மையங்களை அமைப்பதற்கான டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன. கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த டெண்டர்களுக்கான தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டபோது, அதில் மொத்தம் ஐந்து முன்னணி நிறுவனங்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பங்கெடுத்திருந்தனர்.
நிர்வாகக் காரணங்களால் அதிரடி ரத்து:
இவ்வாறு பல்வேறு நடைமுறைகளைக் கடந்து இறுதி கட்டத்தை எட்டியிருந்த இந்த டெண்டர் விவகாரத்தில், தற்போதைய த.வெ.க. அரசு மற்றும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் தரப்பிலிருந்து திடீர் திருப்பமாக ரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்கள் குறித்துத் தொடர்ந்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், நிர்வாகக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த 7 மாவட்ட சாலையோர வசதி மையத் திட்ட டெண்டரும் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய அரசின் திட்டங்களுக்குத் தற்போதைய அரசு தடை விதிப்பதும், டெண்டர்களை ரத்து செய்வதும் தொடர் கதையாகி வரும் சூழலில், அரசின் இந்த அதிரடி முடிவு ஒப்பந்ததாரர்கள் மற்றும் துறைசார் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!
தொடரும் டெண்டர் மறுஆய்வுகளும் அரசியல் தாக்கமும்:
கடந்த சில மாதங்களாகவே போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்ந்த பல்வேறு முந்தைய திட்டங்கள் கடுமையான மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகவும், நிதி மேலாண்மையைச் சீரமைப்பதாகவும் கூறி பல கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவது மாநில அரசியலில் விவாதப் பொருளாய் மாறியுள்ளது. குறிப்பாக, எதிர்காலத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, புதிய விதிமுறைகள் மற்றும் உரிய வெளிப்படைத்தன்மையுடன் மாற்றுத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்தத் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகள் நிர்வாகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகக் பார்க்கப்பட்டாலும், கைவிடப்பட்ட திட்டங்களின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.