ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி.. அரசு எடுத்த நடவடிக்கை..

ONGC - Hydrocarbon In Ramanathapuram: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி.. அரசு எடுத்த நடவடிக்கை..

கோப்பு புகைப்படம்

Published: 

24 Aug 2025 18:54 PM

ராமநாதபுரம், ஆகஸ்ட் 24, 2025: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை ஓஎன்ஜிசி நிறுவனம் அதன் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுக்கும் கொள்கையின் அடிப்படையில், ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி சுமார் 1403 சதுர கிலோமீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

திட்ட விவரங்கள்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. அந்த வகையில் தற்போது அதற்கான அனுமதியை பெற்றுள்ளது. ரூ. 675 கோடி மதிப்பீட்டில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க உள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்காக 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடயநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடி ஏந்தல், காடம்பாடி, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கை:

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், ராமநாதபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. சிறப்பு மலை ரயில் இயக்கம்.. டைமிங் இதுதான்!

அதில், “தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் 2020” இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது. இச்சட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி, மீத்தேன் மற்றும் சேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்து ஆராய்ச்சி மற்றும் தொழில்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தல்:


இதற்கிடையில், ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததைத் தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசிக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது என்பது தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

மேலும் படிக்க: வரலாற்று சின்னம்.. அகற்றப்படும் பழைய பாம்பன் பாலம்.. டெண்டர் அறிவிப்பு!

இதனை அடுத்து, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.