இனி வெயில் நோ நோ! அடுத்த சில நாட்களில் அட்டாக் செய்யப்போகும் மழை.. தமிழகத்தில் எங்கெங்கு தெரியுமா..?
Tamil Nadu Weather Update: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 18 முதல் 20 வரை பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மே 21 முதல் 24 வரை லேசான முதல் மிதமான மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வடதமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை (Rain) பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு (Tamil Nadu), புதுச்சேரி மற்றும் காரைக்கால் அநேக இடங்களில் 3-6° செல்சியஸ் வரை குறைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏதுமில்லை. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை பொறுத்தவரை வானிலை (Weather) சில நேரம் மேகமூட்டமாகவும், சில நேரம் அதிக வெப்பநிலையையும் வெளியிடுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு சில இடங்களில் சாரலும் விழுந்தது. இந்தநிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எப்படி உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 2025 மே 21ம் தேதி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 2025 மே 22ம் தேதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2025 மே 18ம் தேதியான இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2025 மே 19ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2025 மே 20ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய நாளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 2025 மே 20ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
2025 மே 21ம் தேதி முதல் 2025 மே 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான வானிலை அப்டேட்:
2025 மே 18ம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், 2025 மே 19ம் தேதியான நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் 2025 மே 18ம் தேதியான இன்று முதல் 2025 மே 24ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வங்கக்கடல் பகுதிகளில்
2025 மே 18ம் தேதியான இன்றும் 2025 மே 19ம் தேதியான நாளையும் தென்மேற்கு வங்கக்கடலில் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆகிய நாட்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.