Tamil Nadu Electricity Bill: தமிழ்நாட்டில் மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்..? ஜூலை மாதம் முதல் அதிகரிக்க வாய்ப்பு?
Tamil Nadu Electricity Bill Hike: தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். 2025 ஜூலை முதல் 3.16% உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இதற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த உயர்வு வீட்டு, தொழில் மற்றும் வணிக நுகர்வோரை பாதிக்கும். அரசின் இறுதி முடிவுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.

சென்னை, மே 18: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயரும் என்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) ஏற்றுக்கொண்ட வருடாந்திர கட்டமைப்பின் கீழ், வருகின்ற 2025 ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டின் மின்சார கட்டணம் (TN EB Bill) 3.16 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, வருகின்ற 2025 ஜூன் மாதம் முதல் தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயரலாம்.
எவ்வளவு சதவீதம் உயர வாய்ப்பு..?
அகிய இந்திய நுகர்வோர் விலை குறியீட்டால் அளவிடப்படும் ஏப்ரல் 2025க்கான தற்காலிக ஆண்டு பணவிக்கம் 3.16 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது மிக குறைவு. கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல ஆண்டு கட்டண உத்தரவின்படி தானியங்கி கட்டண திருத்தத்தை அறிவித்தது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 2.18 சதவீதமாகவும், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 4.83 சதவீதமாகவும் உயர்ந்தது.
தற்போது மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது கூறியதாவது, “தமிழ்நாடு மின்சாரத்துறை கடனில் இருந்து மீள்வதற்கு ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதியாக உள்ளது.
தமிழ்நாடு அரசு முடிவு:
அதன்படி, வருகின்ற 2025 ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தற்போது 3% உயர்த்துவதற்கு ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு தான் பரிசீலிக்கும். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் மின்சார வாரியம் செயல்படும்” என்று தெரிவித்தனர்.
கடந்த 2025ம் ஆண்டு சராசரியாக 1,000 மின் கட்டணமாக செலுத்தி வந்த வீட்டு நுகர்வோர் 31.6 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவான விநியோக சேவைகளுக்கான மின் நுகர்வு கட்டணங்கள் மற்றும் நிலையான கட்டணங்கள் 3.16 சதவீதம் அதிகரிக்கும். அதேபோல், தொழிற்சாலைகள் மற்றும் பிற குறைந்த அழுத்த நுகர்வோர் போன்ற உயர் அழுத்த நுகர்வோருக்கும் கட்டண திருத்தம் பொருந்தும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டண திருத்தத்தை அதிகபட்சமாக 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாகும், 2023ல் 2.18 சதவீதமும், 2024ல் 4.83 சதவீதமும் உயர்த்தப்பட்டது.