பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி.. புதுக்கோட்டையில் கொடூரம்!
pudukkottai crime news : புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை நர்சிங் கல்லூரி மாணவி உயிருடன் புதைக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதைக்கும்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, குழந்தையை போலீசார் மீட்டனர்.

புதுக்கோட்டை, மே 18 : புதுக்கோட்டையில் பச்சிளம் குழந்தையை நர்சிங் மாணவி உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த சில மணி நேரத்திலேயே இந்த கொடூர செயலை ஈவு இரக்கமின்றி நர்சிங் மாணவி செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் உதயசூரியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோதினி (21). இவர் புதுக்கோட்டையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிலபரசன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்த நிலையில், நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை அடுத்து, வினோதினி கர்ப்பமானார். இதனை அதிர்ச்சி அடைந்த வினோதினி, வீட்டிற்கு தெரியாமலே வைத்திருக்கிறார். நாட்களுக்கு செல்ல செல்ல வயிறு பெரிதானது.
பச்சிளம் குழந்தை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி
இதற்கு தனது பெற்றோரிடம் வயிற்றில் கட்டி இருப்பதாகவும், இதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து, வினோதிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனைக்கு செல்லாமல், தனக்கு தானே பிரசவம் பார்த்திருக்கிறார்.
மேலும், இதுகுறித்து காதலன் சிலம்பரசனிடமும் கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால், அந்த குழந்தை புதைக்க வினோதினி மற்றும் சிலம்பரசன் முடிவு செய்தனர். வினோதினி குழந்தை பிறந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனே அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, வினோதினியும், அவரது தாயார் மற்றும் உறவினர்களும் குழந்தையை புதைக்க முடிவு எடுத்தனர். இதனை அடுத்து, பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையை புதைக்க முயன்றிருக்கின்றனர். அப்போது, இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
புதுக்கோட்டையில் கொடூரம்
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வி. கௌரி குழந்தை காப்பாற்றினர். பின்னர் அவசர சிகிச்சைக்காக குழந்தையை பனையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் குழந்தை மற்றும் தாய் இருவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பனையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செந்தில் குமார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் காவல்துறையில் முறையான புகார் அளித்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி டி. வசந்த் குமார் கூறுகையில், ” தாய் குழந்தையை கொலை செய்ய முயன்றதால், அவர் குழந்தையை வளர்க்க தகுதியற்றவர்.
குழந்தை ஆரோக்கியமாக உள்ளது மற்றும் எங்கள் இரண்டு ஊழியர்களின் பராமரிப்பில் உள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு குழந்தையை சரியாக கவனித்து கொள்வார்கள்” என்று கூறினார்.