‘தோழி விடுதிகளில் தினசரி மற்றும் மாதந்தோறும் அறைகள் முன்பதிவு செய்யலாம்’
Tamil Nadu Women's Hostels:தமிழ்நாடு அரசின் "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கார்ப்பரேஷன் லிமிடெட்" (TNWWHCL) நிறுவனம், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் குறைந்த விலையில் தங்குமிடம் வழங்குகிறது. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 11 விடுதிகள் இயங்கி வருகின்றன. தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் அறைகள் முன்பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.

தமிழ்நாடு மே 19: தமிழ்நாடு அரசு (Government of Tamil Nadu), பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் வழங்கும் நோக்கில் 2019-ஆம் ஆண்டு “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கார்ப்பரேஷன் லிமிடெட்” (Tamil Nadu Workers Welfare Board) நிறுவனத்தை தொடங்கியது. வேலை, பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக பயணம் செய்யும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் இந்த விடுதி வசதி வழங்கப்படுகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மொத்தம் 11 தோழி மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் அறைகள் முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு. இங்கு மாத வாடகை ரூ.2000 முதல் தொடங்கி, பயோமெட்ரிக் அடையாளம் மூலம் பாதுகாப்பான நுழைவு, 24 மணி நேர வைஃபை, குடிநீர், ஹீட்டர், வாஷிங் மெஷின் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் தோழி மகளிர் விடுதி
பணிபுரியும் மகளிரின் தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு 28.05.2019 அன்று “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கார்ப்பரேஷன் லிமிடெட்” (TNWWHCL) எனும் பிரத்யேக நிறுவனத்தை நிறுவியது. 2013ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், 06.02.2020 முதல் இந்தியக் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம், வேலை, பயிற்சி அல்லது உத்தியோகபூர்வ காரணங்களுக்காக வேறு மாவட்டங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் குறைந்த செலவில் தங்குமிடத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் அறைகள் முன்பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.
பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம்
தற்போது சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் என ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் 11 தோழி மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவை 2, 4 மற்றும் 6 பேர் தங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அறைகளின் மாத வாடகை ரூ.2000 முதல் ஆரம்பமாகிறது. மேலும், சாப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விடுதி மேலாளர்கள் மற்றும் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு
பெண்கள் தங்கும் விடுதியில் தங்கள் தேவைக்கேற்ப தினசரி (ஒரு நாள், சில நாட்கள்) அல்லது மாதாந்திரமாக (முழு மாதம்) தங்க அறைகளை முன்கூட்டியே பதிவு (புக்கிங்) செய்ய முடியும். அதாவது, வேலை, பயணம் அல்லது பயிற்சிக்காக தற்காலிகமாக தங்க விரும்பும் பெண்கள், தங்கள் வசதிக்கேற்ப நாளுக்கோ, மாதத்துக்கோ ஏற்கனவே அறைகளை முன்பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள் உள்ளன?
இவ்விடுதிகளில் நுழைவதற்கான பாதுகாப்பு நடைமுறையாக பயோமெட்ரிக் அடையாள பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனுமதியில்லாத நபர்கள் உள்ளே நுழைய முடியாது. 24 மணி நேர வைஃபை, வாஷிங் மெஷின், குடிநீர், ஹீட்டர், ஐரன் பாக்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன.
தோழி மகளிர் விடுதி, புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3.6 கி.மீ., ரயில்நிலையத்திலிருந்து 4.6 கி.மீ., பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களின் காரணமாக இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு உகந்த இடமாக இருக்கிறது.
இவ்விடுதியில் தங்க விரும்பும் பெண்கள், தமிழ்நாடு அரசின் உதவிக்கான தொலைபேசி எண் 94999 88009-ஐ அணுகலாம். மேலும், விண்ணப்பம் மற்றும் வசதிகள் குறித்த விரிவான தகவலுக்கு techexe@tnwwhcl.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.