ஆணவக்கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம்.. 3 மாதங்களில் பரிந்துரை வழங்க முடிவு..
Honor Killing Commission: ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் உருவாக்குவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. என். பாஷா தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே. என். பாஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 14, 2025: ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைகள் அளிக்க, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 17, 2025 அன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஆணவக் கொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்றப்படும் என்றும், இதற்கு தேவையான பரிந்துரைகள் அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. என். பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் அடங்கிய ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் ஆணவக்கொலைகள்:
தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னோடியாக செயல்பட்டு, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் இன்னும் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. சட்டங்கள் கடுமையாக இருந்தாலும், தண்டனைகள் அதிகரிக்கப்பட்டாலும், ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து வருவது கவலைக்கிடம். இருந்தாலும், இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது நிதர்சனமாக குறிப்பிடப்படுகிறது.
Also Read: நவ. 21 வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ. 16 முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..
ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம்:
தமிழகத்தில் ஆணவக் கொலைகளை முற்றிலுமாக தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தனி சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சட்டம் உருவாக்குவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. என். பாஷா தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே. என். பாஷா நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பழனிகுமார் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ். ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read: SIR-க்கு எதிர்ப்பு: விஜய் எடுத்த அதிரடி முடிவு.. தமிழகம் முழுவதும் நவ.16ல் தவெக ஆர்ப்பாட்டம்!!
ஆணையம் தரப்பில் கருத்து கேட்கப்பட்டபின் அரசுக்கு பரிந்துரை வழங்கும்:
இந்த ஆணையம் சார்பில் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு, உரிய பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்படும். இதற்கான தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இந்த ஆணையம் கலந்துரையாட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், இந்திய அரசமைப்பு சட்டம் மற்றும் தமிழக சட்ட விதிகளின் அடிப்படையில் புதிய சட்டம் உருவாக்குவது தொடர்பாக இந்த ஆணையம் ஆய்வு செய்து, மூன்று மாதங்களில் பரிந்துரைகள் வழங்கும். அதன் அடிப்படையில் ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான முடிவுகளை தமிழக அரசு எடுக்கும் என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.