காசா இனப்படுகொலை.. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் ஸ்டாலிம்ன்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காசா மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, வரும் அக்டோபர் 14, 2025 அன்று நடைபெறும் ” தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

காசா இனப்படுகொலை.. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் ஸ்டாலிம்ன்

கோப்பு புகைப்படம்

Updated On: 

08 Oct 2025 12:54 PM

 IST

சென்னை, அக்டோபர் 8, 2025: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “காசா இனப்படுகொலையை கண்டித்து — சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று, அதாவது அக்டோபர் 8, 2025 அன்று, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, ம.தி.மு.க. முதன்மைச்செயலாளர் துரை வைகோ, சி‌.பி‌‌.ஐ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன், ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூட்டணி கட்சியினர் அனைவரும் பங்கேற்றனர்.

காசா மீது தொடரும் தாக்குதல்:

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு மிகவும் மோசமான நிலை நிலவி வருகிறது. குறிப்பாக உணவு இன்றி அங்கு குழந்தைகள் பலர் உயிரிழக்கும் கொடூரம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த சூழல் உலக நாடுகளை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த போரை நிறுத்துவதற்காக ஐ.நா. சபையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

காசாவில் நடக்கும் சம்பவம் மனதை நொறுக்கியுள்ளது – முதல்வர் ஸ்டாலின்:


இந்த சூழலில் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “காசாவில் நிகழும் இனப்படுகொலை உலக மக்களின் மனதை உலுக்குகிறது. மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரும் இந்த போரை கண்டிக்கின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு நமது மனப்பூர்வமான ஆதரவை வழங்குகிறோம்.

மேலும் படிக்க: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தஷ்வந்த் விடுதலை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 11 ஆயிரம் பெண்கள், 17 ஆயிரம் குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்து வாடுகின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஓராண்டு காலத்தில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. உணவுக்காக காத்திருந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் என்னுடைய இதயத்தை நொறுக்கியுள்ளது. இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா?”

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்:

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலால் பச்சிளம் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த இனப்படுகொலையை கண்டித்து, மனிதநேய சிந்தனை கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு இதை கண்டிக்கிறது.

மேலும் படிக்க: கரூர் செல்லும் விஜய்… அனுமதி கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்!

இந்த இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும். மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. மனித உரிமை எல்லோருக்கும் பொதுவானது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து இந்திய அரசு காசா போரை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். காசா மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, வரும் அக்டோபர் 14, 2025 அன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்,” என அவர் தெரிவித்துள்ளார்.