Kanimozhi Karunanidhi: அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை.. திமுக எம்பி கனிமொழி பேட்டி..!
Pollachi Assault Case: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. திமுக எம்பி கனிமொழி, இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததாகவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியின்போது வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய திமுகவின் முயற்சியின் வெற்றியாகவும் இதை அவர் குறிப்பிட்டார்.

திமுக எம்பி கனிமொழி கருணாநிதி
கோவை, மே 13: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை (Pollachi Assault Case) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 376Dன் கீழ், குற்றவாளிகள் தங்கள் மீதமுள்ள வாழ்க்கையை ஆயுள் தண்டனையாக அனுபவிப்பார்கள் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பளித்தார். தொடர்ந்து, இந்த வழக்கில் சாட்சியளிக்க முன்வந்த 8 பெண்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்தநிலையில், பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக திமுக எம்பி கனிமொழி (Kanimozhi Karunanidhi) தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
கனிமொழி திமுக எம்பி செய்தியாளர்கள் சந்திப்பு:
பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்புக்கு பிறகு திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், பாலியல் கொடுமைகள் என நடந்த அத்தனையும் நம் மனதில் ஒரு காயமாக மாறியது. இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என்பது அந்த காயத்திற்கு மருந்தாக அளிக்கக்கூடிய ஒன்றாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய ஒன்றாக, குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை கொடுக்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. மிக முக்கியமாக பாதிக்கப்பட்ட பெண்களுடைய விவரங்கள் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நியாயம் கிடைத்திருக்கிறது.
இதுபோல், ஏதேனும் ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால், அவர்கள் தைரியத்துடன் வெளியே வந்து தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவதற்கு முன்பாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, அது நிறைவேறியுள்ளது.
அதிமுக ஆட்சியின்போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க விடாமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தது. ஆனால், அப்போதே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன்காரணமாகவே, இந்த வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு இப்போது தீர்ப்பு கிடைத்துள்ளது. பாலியல் சார்ந்த குற்றங்களுக்கு எந்த கட்சியை சார்ந்த நபர்கள் குற்றம் செய்திருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்காரணமாகவே, தமிழ்நாடு தற்போது பாதுகாப்பான மாநிலமாக மாறியுள்ளது. அதிமுக இன்று வெட்கி தலைகுனிய வேண்டும். அதிமுக ஆட்சியில் யாரை பாதுகாக்க நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல தீர்ப்பு” என்று தெரிவித்தார்.