திறந்து வைப்பதா பெருமை? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை.. மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும் – மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்..
MK Stalin On CM Vijay: அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் என குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 16. 2026: கோவையில் இன்று திறக்கப்பட உள்ள பெரியார் அறிவுலகம் நூலகம் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தற்போதைய அரசை விமர்சித்துள்ளார். “யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 300 கோடியில் பெரியார் அறிவுலகம்
கோவை காந்திபுரம் அருகே, மத்திய சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ₹300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது. 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு, கடந்த 2024 நவம்பர் 6ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
இன்று திறக்கப்பட உள்ள இந்த நூலகத்தில் சுமார் 1.25 லட்சம் புத்தகங்கள், குழந்தைகள் நூலகம், போட்டித் தேர்வுப் பிரிவு, தமிழ் மற்றும் ஆங்கில நூலகங்கள், அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் விண்வெளி தொடர்பான சிறப்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
திமுக அரசின் சாதனை என ஸ்டாலின் பெருமிதம்
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai #Coimbatore #PeriyarArivulagam https://t.co/NRb49LHvbO
— M.K.Stalin (@mkstalin) October 16, 2026
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 நிதிநிலை அறிக்கையில் கோவை மக்களுக்காக நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டு, விரைந்து பணிகளை முடித்து உருவாக்கப்பட்ட அறிவுலகம் திமுக அரசின் சாதனை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தொடர் விடுமுறை எதிரொலி.. வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்!!
மேலும், சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருச்சி, நெல்லை, சேலம், கடலூர் ஆகிய நகரங்களிலும் பெரிய நூலகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘நான் முதல்வன்’ பெயர் மறைப்பு குறித்தும் விமர்சனம்
பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் உள்ள கணினி மேசையில் பொறிக்கப்பட்டிருந்த ‘நான் முதல்வன்’ பெயர் மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஸ்டாலின், இதற்கும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயல் திமுக அரசின் திட்டங்களை மறைக்கும் முயற்சி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நூலகங்கள், புத்தகத் திருவிழாக்கள் மற்றும் அறிவியல் மையங்கள் மூலம் வாசிப்புப் பழக்கத்தையும் பகுத்தறிவையும் வளர்ப்பதே திமுகவின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், பெரியார் அறிவுலகம் கோவையின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள், இந்த நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அதிரடி திருப்பம்.. கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்த மோப்ப நாய்.. 5வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை!!
மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்
அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்!
என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!