ஏடிஎம் இயந்திரத்தில் கசிந்த மின்சாரம்.. பின் நம்பர் போட முயன்றவருக்கு ஷாக்!

காஞ்சிபுரம் கம்மன் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன், HDFC ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது மிஷினில் மின்சார கசிவு இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான சோதனையில் கீபேட்டில் மின்சாரக் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக வங்கி அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் கசிந்த மின்சாரம்.. பின் நம்பர் போட முயன்றவருக்கு ஷாக்!

ஏடிஎம் இயந்திரம்

Updated On: 

18 Aug 2025 10:02 AM

காஞ்சிபுரம், ஆகஸ்ட் 18: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 2025, ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரங்கள் என்பது மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக அமைந்து விட்டது. 24 மணி நேரமும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கலாம். மற்றவர்கள் கணக்கிற்கு பணம் அனுப்பலாம் போன்ற வசதிகள் இருப்பதால் திரும்பும் திசையெங்கும் பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. சில நேரங்களில் இயந்திர கோளாறு, பண இருப்பு இல்லாமை, நெட்வொர்க் பிரச்னை போன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் ஷாக் அடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், கம்மன் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன். இவர் மனைவி மற்றும் மகனுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 17) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெங்கடேசன் தனது எட்டு வயது மகனுடன் காலையில் காய்கறி சந்தைக்குச் சென்றிருந்தார். அப்போது அவருக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள HDFC வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

Also Read: திருச்சி அருகே 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராமம்!

உள்ளே சென்ற அவர் கார்டை இயந்திரத்தில் செலுத்தி பின் நம்பர் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது எண்கள் அமைந்திருக்கும் கீபேடில் மின்சாரம் தாக்கியது. ஆனால் அதைப் பற்றி பெரிதும் உணராமல் இருந்துள்ளார். ஆனால் அதற்கு கால அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் பணம் எடுக்க முயற்சி நம்பரை கொடுத்துள்ளார். அப்போதும் ஷாக் அடித்ததால் அவரது கைது சிறிது நேரம் செயல்படாமல் போனது.

இதன்பின்னரே ஏடிஎம் இயந்திரத்தில் மின்சாரம் பாய்வதை வெங்கடேசன் உணர்ந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மகனுடன் ஏடிஎம் மையத்தை விட்டு வெளியேறி உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவர்களிடம் நடந்ததைக் கூற அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏடிஎம் மையத்தில் வெங்கடேசனுக்கு ஷாக் அடித்த சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது. பொதுமக்கள் இதுதொடர்பாக விஷ்ணு காஞ்சி நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Also Read: பெரம்பலூர்: சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்த இருவர் உயிரிழப்பு

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஒரு எலக்ட்ரீசியனை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை சோதனையிட்டனர். அதில் கீபேட் பகுதியில் உண்மையில் மின்சாரம் கசிந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மின்சார கசிவின் அளவு குறைந்த மின்னழுத்தமாக இருந்தாலும், அது வலிமிகுந்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடியது என்று அந்த எலக்ட்ரீசியன் தெரிவித்துள்ளார். ஆனால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுதாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட HDFC வங்கி கிளை நிர்வாகத்திற்கு போலீசார் தகவல் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.