ஒரு ஸ்வீட் பாக்ஸ் கேட்டது குத்தமாடா.. வீட்டிற்கு வந்திறங்கிய பிரிட்ஜ், வாஷிங் மெஷின்.. சிக்கித்தவிக்கும் இன்ஸ்டா பிரபலம் வீரமணி..
Viral News: ஒரு ஸ்வீட் பாக்ஸ் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வீரமணியின் முகவரிக்கு விலை உயர்ந்த பொருட்கள் தொடர்ந்து வரத் தொடங்கியது. குறிப்பாக, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பணம் செலுத்திப் பெறும் வகையிலான Cash on Delivery முறையில் ஆர்டர் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 13, 2026: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் மூழ்கிக் கிடக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் வெளியிடும் பதிவுகளும் அவ்வப்போது கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு ஒரு ஸ்வீட் பாக்ஸ் அனுப்பி வைக்குமாறு தனது பின்தொடர்பாளர்களிடம் கேட்ட மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வீரமணி, தற்போது எதிர்பாராத சிக்கலில் சிக்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் வீரமணி – பின்தொடர்பாளர்கள் தந்த பணத்தில் சுற்றுலா:
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த வீரமணி, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுற்றுலா செல்வதற்காகத் தனது பின்தொடர்பாளர்களின் உதவியைக் கோரியதாகவும், அதன் மூலம் ரூ.6,000 கிடைத்த நிலையில் கேரளாவுக்குச் சென்று பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தனக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் அனுப்பி வைக்க முடியுமா எனத் தனது பின்தொடர்பாளர்களிடம் வீரமணி கேட்டுக்கொண்டார். அப்போது, தான் இருக்கும் முகவரியையும் தெளிவாகக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
ஸ்வீட் பாக்ஸ் கேட்டவருக்கு வந்த அதிர்ச்சி!
ஒரு ஸ்வீட் பாக்ஸ் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வீரமணியின் முகவரிக்கு விலை உயர்ந்த பொருட்கள் தொடர்ந்து வரத் தொடங்கியது. குறிப்பாக, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பணம் செலுத்திப் பெறும் வகையிலான Cash on Delivery முறையில் ஆர்டர் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், காலை முதல் மாலை வரை பல்வேறு டெலிவரி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். விலை உயர்ந்த தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பொருட்களும் ஆர்டர் செய்யப்பட்டதாகவும், சிலர் ஜேசிபி போன்ற பெரிய வாகனங்களையும் ஆர்டர் செய்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
தொடர்ந்து டெலிவரி ஊழியர்கள் வீட்டுக்கு வந்ததால், ஆர்டர்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க முடியாமல் வீரமணி சிக்கித்தவித்துள்ளார். . இதனால், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“கையெடுத்துக் கும்பிடுகிறேன்; ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள்!”
இதையடுத்து, தனது பின்தொடர்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்து வீரமணி மற்றொரு வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “உங்கள் கை, கால்களில் விழுந்து கும்பிடுகிறேன். தயவுசெய்து ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். என்னால் போனைக் கூட பார்க்க முடியவில்லை. போனை ஆப் செய்தாலும் பிரச்சினை; ஆன் செய்தாலும் பிரச்சினை. ஒரு ஸ்வீட் பாக்ஸுக்கு ஆசைப்பட்டு முகவரியைக் கொடுத்துவிட்டு மிகவும் சிரமப்படுகிறேன். இனிமேல் உங்களிடம் எதுவும் கேட்க விரும்பவில்லை. தயவுசெய்து ஆர்டர் செய்வதை மட்டும் நிறுத்துங்கள்” என மனவேதனையுடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள்
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பலரும் வெவ்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதனை நகைச்சுவையாகப் பார்க்கும் நிலையில், முறையாகப் பெறப்படாத ஆர்டர்களால் டெலிவரி ஊழியர்களும் தேவையற்ற சிரமங்களைச் சந்திக்க நேரிடும் எனப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களைப் பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போலியான அல்லது அனுமதியற்ற ஆர்டர்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.