ரயிலில் ராமேஸ்வரம் போறீங்களா..? வெளியான முக்கிய அறிவிப்பு…
Rameshwaram Train Time: ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலத்தில் ரெயில்கள் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2025 மே 14 மற்றும் 15 முதல் பல ரெயில்களின் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இந்த மாற்றங்களை முன்னதாக அறிந்து கொண்டு பயண திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மே 13: புதிய பாம்பன் பாலத்தில் (New Pamban Bridge) ரெயில்கள் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் (Rameshwaram) வழியாக செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி, திருப்பதி, சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை செல்லும் ரெயில்கள் 2025 மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் இருந்து புதிய நேரத்தில் புறப்படும். ராமேஸ்வரம்–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 2025 ஜூன் 7 முதல் மண்டபத்தில் தற்காலிக நிறுத்தம் ஏற்படும். பயணிகள் நேர மாற்றங்களை கவனத்தில் கொண்டு திட்டமிடுமாறு ரெயில்வே (Southern Railway) கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மாற்றம், புதிய பாலத்தின் மேம்பட்ட இயங்குதிறனை பயன்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பாம்பன் பாலத்தில் வேகம் உயர்வு
புதிய பாம்பன் பாலம் என்பது தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் தீவுக்கு செல்லும் முக்கியமான பாலமாகும். இது பழைய பாம்பன் ரயில் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டுள்ளது. பாம்பன்-ராமேஸ்வரம் இடையே கடல் மேலாக கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம் கடந்த 2025 ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. பழைய பாலத்தில் ரெயில்கள் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயங்க முடிந்தது. ஆனால், புதிய பாலம் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளதால், அதில் ரெயில்கள் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது.
ரெயில்வே நேரங்களில் மாற்றம்
புதிய பாலத்தில் அதிக வேகத்தில் ரெயில்கள் இயங்குவதால், ராமேஸ்வரம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 மே 14ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட ரெயில் நேரங்கள்
திருச்சி எக்ஸ்பிரஸ் (16850): ராமேஸ்வரத்திலிருந்து 2025 மே 14 முதல் மதியம் 2.50க்கு பதிலாக 3.00 மணிக்கு புறப்படும்.
திருப்பதி எக்ஸ்பிரஸ் (16780): 2025 மே 15 முதல் மாலை 4.20க்கு பதிலாக 4.30 மணிக்கு புறப்படும்.
சென்னை எக்ஸ்பிரஸ் (16752): 2025 மே 14 முதல் மாலை 5.30க்கு பதிலாக 5.50 மணிக்கு புறப்படும்.
கோவை எக்ஸ்பிரஸ் (16617): 2025 மே 14 முதல் இரவு 7.30க்கு பதிலாக 7.55 மணிக்கு புறப்படும்.
சென்னை எக்ஸ்பிரஸ் (22662): 2025 மே 14 முதல் இரவு 8.35க்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (22621): 2025 ஜூன் 7 முதல் மண்டபம் ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும். ராமேஸ்வரத்தில் இந்த ரெயில் இரவு 9.10க்கு பதிலாக 9.15 மணிக்கு புறப்படும்.
மதுரை பயணிகள் ரெயில்: 2025 மே 14 முதல் மாலை 6.00க்கு பதிலாக 6.15 மணிக்கு புறப்படும்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு
இந்த நேர மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு பயண திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. புதிய பாலத்தின் செயல்பாடுகள் வேகமான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் அமையப்பெற்றுள்ளது.