ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Temple Prasad Contamination: கிருஷ்ணகிரி அருகே உள்ள சந்திரசூடேஸ்வரர் கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட புளியோதரையில் இறந்த பாம்பு இருந்தது கண்டறியப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பரவிய இந்தச் செய்தி உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறையின் விசாரணை நடந்து வருகிறது.

மரகதாம்பிக்கை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் - பிரசாதத்தில் பாம்பு
தெருவோரக் கடைகள் முதல் கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்கள் வரை அனைத்திலும் மக்களுக்கு ஆரோக்கியமான முறையில் உணவுகள் சென்றடைய வேண்டும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில ஹோட்டல்கள் (Hotels) மற்றும் தெருவோர கடைகளில் சுத்தம் இல்லாமல் செய்யப்படும் உணவுகளால் மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை (Food Safety and Drug Administration Department) அதிரடி நடவடிக்களை மேற்கொண்டு கடைகளுக்கு சீல் வைக்கிறது. எப்படி கடைகளுக்கு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் உணவு பாதுகாப்பு துறை, கோயில் (Temple) பிரசாதத்தில் பாம்பு இருந்தால் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கருத்து உங்களுக்கு அதிர்ச்சியை தரலாம், ஆனால் இப்படியான சம்பவம் கிருஷ்ணகிரி அடுத்த ஓசூரில் நடந்துள்ளது.
என்ன நடந்தது..?
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த மலைக்கோயில் என்று அழைக்கப்படும் மரகதாம்பிக்கை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலானது 800 ஆண்டுகள் பழமையான கோயில் என்றும், இங்கு தினசரி தரிசனத்திற்காக 800 முதல் 1000 பேர் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோயில், இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநிலையில், புகழ்பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட புளியோதரை அடங்கிய பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் இறந்த நிலையில் குட்டி பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அங்கிருந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாதத்தில் பாம்பு இருந்தது குறித்து கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் முறையிட்டபோது, கோயில் நிர்வாக அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் உடனடியாக இந்து அறநிலைய துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் அளித்த நிலையில், தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவிய தகவல்:
ஓசூரில் புகழ்பெற்ற மரகதாம்பிக்கை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் பிரசாதத்தில் பாம்பு இறந்து கிடந்ததை அங்கிருந்த பக்தர்கள், சமூக வலைதளங்களில் வெளியிட்டு இந்து அறநிலைய துறையை டேக் செய்து கேள்விகளை முன்வைத்தது. அப்போது, அந்த பதிவிற்கு கீழே கமெண்ட் செய்த ஒருவர், “அது எப்படி கோயில் பிரசாதத்தின் மேல் சரியாக பாம்பு இறந்து கிடக்கிறது. இந்த பிரசாதம் அடங்கிய பிளாஸ்டிக் டப்பா மூடியை பார்க்காமலா ஒருவர் மூடியுள்ளார். யாரோ வேண்டுமென்றே பிரசாதத்தில் பாம்பை போட்டு, பொய்யை பரவுவது போல் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தது.
இது குறித்து மரகதாம்பிக்கை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பிலும், இந்து அறநிலைய துறை சார்பிலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் சிலர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரசாதத்தில் பாம்பு இருந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.