பொறியியல் படிப்பிற்காக 2.41 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.. இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது..
Engineering Counselling: 2025-2026ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7, 2025 தேதியான இன்று காலை 10 மணிக்கு தொடங்குகியது. இரண்டு நாட்களுக்கு சிறப்பு பிரிவினருக்கும் அதனை தொடர்ந்து பொது பிரிவினருக்கு என அனைவருக்கும் ஒரே கட்டமாகவும் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 7, 2025: 2025-2026ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7, 2025 தேதியான இன்று காலை 10 மணிக்கு தொடங்குகியது. இந்தாண்டு கலந்தாய்விற்கு 2.41 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது. 2025, ஜூலை 7 மற்றும் ஜூலை 8, அரசு பள்ளியில் படித்த சிறப்பு பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ள ( மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்று அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் என சுமார் 445 பொறியியல் கல்லூரிகள் சுமார் 2 லட்சம் பி.இ, பி.டெக் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு நடத்துகிறது.
பொறியியல் கலந்தாய்வு:
இந்த கல்லூரிகளில் 2025-26ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் வாயிலாக கடந்த 2025, மே மாதம் 7ம் தேதி முதல் 2025, ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த கால அவகாசத்தில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 2025, ஜூன் 11ம் தேதி 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்களுக்கு 10 இலக்க ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் அடிப்படையில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு 2,41,641 மாணவர்களில் 2,39,299 பேர் பொதுப்பிரிவுக்கும், 2342 பேர் தொழில் கல்வியின் கீழும் தகுதி பெற்றனர். 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை 2025, ஜூன் 27ம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் வெளியிட்டார்.
அதன்படி, 144 மாணவ மாணவியர் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தனர். இவர்களில் 139 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். மீதம் உள்ள 5 பேர் இதர வாரியங்களின் கீழ் படித்தவர்கள். இவர்களுக்கான கலந்தாய்வு இன்று (2025, ஜூலை-7) தொடங்கி 2025, ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கொடுத்திருக்கக்கூடிய விருப்ப பட்டியல் அடிப்படையில், தற்காலிக ஒதுக்கீட்டு இடம் 2025, ஜூலை 8ம் தேதி காலை 7 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் தற்காலிக இடங்களை மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, மாணவர்கள் உறுதி செய்த இடங்கள் அடிப்படையில் அவர்களுக்கான பொறியியல் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை 2025, ஜூலை 8ம் தேதி இரவு 9 மணிக்கு விடுவிக்கப்படும்.
பொதுப்பிரிவு கலந்தாய்வு:
தொடர்ந்து பொதுப்பிரிவில் சிறப்பு பிரிவு மாணவ மாணவியருக்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு 2025, ஜூலை 9ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து 2025, ஜூலை 14 முதல் 2025, ஆகஸ்ட் 20 வரை பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு 3 கட்டமாகவும், அரசுப்பள்ளி மற்றும் அரசுப்பள்ளியில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஒரே கட்டமாகவும் www.tneaonline.org என்ற இணையதளத்தில் 2025, ஜூலை 14 முதல் நடைபெறும்.