ரூ.1 கோடி வேணும்.. மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்.. பரபரப்பு கடிதம்!
Former Minister SP Velumani : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எஸ்பி. வேலுமணியிடம் ரூ.1 கோடி கேட்டு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ரூ.1 கோடி கொடுக்காவிட்டால் மூன்று மாதங்களுக்குள் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி உள்ளதாக தெரிகிறது.

எஸ்பி வேலுமணி
சென்னை, மே 23 : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு (EX Minister SP Velumani) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால், எஸ்.பி.வேலுமணிக்கு பாதுகாப்பு கோரி கோவை மாவட்ட காவல் ஆணையரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் குடும்பத்துடன் எஸ்பி வேலுமணி வசித்து வருகிறார். இவர் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான இவர், அதிமுக தலைமை நிலைய செயலாளராக உள்ளார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்திருக்கிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்படியான சூழலில், எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்
அதாவது, எஸ்.பி.வேலுமணியிடம் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால், குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மர்ம நபர் மிரட்டி இருக்கிறார். மேலும், ஜூலை 30ஆம் தேதி கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது என்றும் இதில் வேலுமணியை கொல்லுவோம் என்றும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், வேலுமணி அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து, கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்பி வேலுமணிக்கு பாதுகாப்பு கோரி அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் மாநில துணைச் செயலாளர் தாமோதரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 2025 மே 23ஆம் தேதியான இன்று காலையில் மனு அளித்துள்ளனர்.
மாவட்ட காவல் ஆணையரிடம் அதிமுக மனு
தொடர்ந்து, இந்த கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அடையாளம் காண வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக கோவை போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.
அதிமுகவின் ஆரம்பத்தில் இருந்தே களப் பணியாற்றி வருபவர் எஸ்பி வேலுமணி. கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர் இவர். ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு துறை அமைச்சராக இருந்தவர். 2001ஆம் தேதி குனியமுத்தார் நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற எஸ்பி வேலுமணி, 2006,2011,2016 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011ஆம் ஆண்டு முதல்முறையாக அமைச்சராக பொறுப்புக்கு வந்தார். நகராட்சி நிர்வாகம், சட்டத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.